சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் பயணத்திற்காக காத்திருக்கும் (டிரான்சிட்) பகுதியில் பயணிகளை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் விதமாக புதிய ஓய்வு இடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை சாங்கி விமான நிலையக் குழுமம் திங்கட்கிழமை (பிப்ரவரி 17) வெளியிட்டது.
400 சதுரமீட்டர் அளவில் உருவாக்கப்பட்ட பிட்&ஃபன் சோன் (Fit&Fun Zone) ஓய்விடம் இரண்டாம் முனையத்தின் பயணத்திற்காக காத்திருக்கும் பகுதியில் உள்ள மூன்றாம் தளத்தில் உள்ளது.
அந்த இடத்தில் பயணிகள் உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் தரும் ஐந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும்.
பிட்&ஃபன் சோனின் பச்சைப் பகுதியில் ஆறு ஊஞ்சல் நாற்காலிகள் உள்ளன. அதில் பயணிகள் அமர்ந்துகொண்டு மின்னிலக்க முறையில் உருவாக்கப்பட்ட இயற்கை காட்சிகளை கண்டு ஓய்வு எடுக்கலாம்.
பரபரப்பாக இயங்கும் விமான நிலையத்தில் அமைதியான சூழலை அது கொடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆரஞ்சு பகுதியில் பயணிகள் உற்சாகத்தை அதிகரிக்கும் விதமாக குத்து சண்டை பயன்படுத்தும் பைகள் இருக்கும். அவற்றை பயணிகள் குத்தி விளையாடலாம்.
இளஞ்சிவப்பு பகுதியில் உடல் உறுதி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
மஞ்சள் பகுதியில் பயணிகள் குதித்து விளையாட ஐந்து டிராம்போலைன்கள் (trampoline) உள்ளன.
நீலப் பகுதியில் குகை போன்ற வடிவமைப்பில் மேஸ் (Maze) விளையாட்டு உள்ளது.