ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) ஆர்வலர்கள், ஆகஸ்ட் 3ஆம் தேதிமுதல் கூடுதல் இடங்களில் அவற்றைப் பறக்கவிட்டு மகிழலாம்.
சுவா சூ காங், மவுண்ட் ஃபேபர், தெம்பனிஸ், தோ பாயோ ஆகிய நான்கு சாஃப்ரா மன்றங்களில் உள்ள ஃபுட்சால், சுவர்ப்பந்து விளையாட்டு அரங்கங்கள் ஆளில்லா வானூர்திகள் பறக்கும் தளங்களாகின்றன.
ஆறு மாத கால சோதனை நடவடிக்கையாக இது இடம்பெறுவதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் (சிஏஏஎஸ்) சாஃப்ராவும் இணைந்து வியாழக்கிழமை (ஜூலை 30) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
வாரந்தோறும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் இந்த ஏற்பாடு நடைமுறையில் இருக்கும்.
ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிடுவோர் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ளச் சிறப்புப் பயிற்சிக் கூடாரங்கள் உள்ளிட்ட வசதிகள் அங்கு ஏற்படுத்தப்படும்.
அத்துடன், பாதுகாப்பு நடைமுறைகள், வழிகாட்டல்கள் குறித்த விழிப்புணர்வு அறிவிப்புகளும் வைக்கப்படும்.
பொதுமக்கள், சாஃப்ரா கைப்பேசிச் செயலி அல்லது இணையத்தளம் வழியாக இலவசமாக நேரத்தை முன்பதிவு செய்யலாம். சிஏஏஎஸ் டெலிகிராம் குழுவில் இணைந்து புதிய தகவல்களை உடனுக்குடன் பெறலாம்.
பாண்டான் நீர்த்தேக்கம், டோவர் ஆகிய திறந்தவெளிப் பகுதிகளைப் போல் அல்லாமல், இவை மூடிய அரங்குகளில் அமைக்கப்படுகின்றன. இத்தகைய மூடிய இடங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியுமா என்பதை ஆராய்வதே இச்சோதனையின் நோக்கமாகும்.
இச்சோதனை வெற்றிபெற்றால், பொழுதுபோக்கு நடவடிக்கைக்காக மேலும் பல சமூக இடங்களைச் சிஏஏஎஸ் வழங்கும் என்று அதன் இயக்குநர் டான் சுன் வெய் தெரிவித்தார்.
தேசியச் சேவையாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சாஃப்ரா கழகங்களில் ஆளில்லா வானூர்தியைப் பறக்கவிட்டுத் திறன்களை வளர்த்துக்கொள்ள இச்சோதனை உதவும் என்று சாஃப்ரா இயக்குநர் லின்டியா டான் கூறினார்.

