ஹவ்காங்கில் உள்ள ஒருங்கிணைந்த மனநலப் பராமரிப்பு நிலையம் கடந்த மே மாதத்திலிருந்து செயல்பட்டு வருகிறது. அப்போது முதல் மனநலக் கழகத்தில் நீண்டகாலமாகத் தங்கியிருந்த 151 பேரை அது தாதிமை இல்லத்தில் சேர்த்துள்ளது.
மேலும் 14 நோயாளிகள் அதே வளாகத்தில் தன்னிச்சையாக செயல்பட ஆதரவளிக்கும் மற்றொரு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நீண்டகால மனநலப் பராமரிப்பை சமூகம் சார்ந்த சூழல்களுக்கு மாற்றுவதற்கான சிங்கப்பூரின் தொடர் முயற்சிகளுக்கு ஹவ்காங் நிலையம் ஓர் எடுத்துக்காட்டு.
‘வேன்கார்ட் ஹெல்த்கேர்’ அமைப்பால் நிர்வகிக்கப்படும் லோரோங் நபிரியில் அமைந்துள்ள இந்த வளாகம், ஒன்றுக்கொன்று பூர்த்திசெய்யும் மூன்று சேவைகளைக் கொண்டுள்ளது. 24 மணி நேர தாதியர் பராமரிப்பை வழங்கும் 257 படுக்கைகள் கொண்ட பராமரிப்பு இல்லம், சுயசார்பு வாழ்க்கை, தொழிற்திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் 48 படுக்கைகள் கொண்ட இல்லம், 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் திறக்க திட்டமிடப்பட்டுள்ள பகல்நேரப் பராமரிப்பு நிலையம் ஆகியவை இவற்றில் அடங்கும்.
“ஒரு நபரின் தேவைகள் மாறும்போது பல்வேறு நிலைகளில் ஆதரவை வழங்கும் தொடர்ச்சியான பராமரிப்பு முறை நமக்குத் தேவை. தற்போதுள்ள நோயாளிகள் வயதாகும்போது இதற்கான தேவையும் அதிகரிக்கும்,” என்று திங்கட்கிழமை (அக்டோபர் 5) வேன்கார்ட் ஹெல்த்கேரின் ஹவ்காங் நிலையத்தின் அதிகாரபூர்வ திறப்பு விழாவில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
புதிய பராமரிப்பு முறைகளைச் சோதிப்பதற்காக பொது நிறுவனமாக வேன்கார்ட் ஹெல்த்கேர் அமைப்பை சுகாதார அமைச்சு நிறுவியது. இதில் ஒரு முதியோர் பராமரிப்பு இல்லமும் மனநல மறுவாழ்வு இல்லமும் இருக்கும்.
இதன் மூலம் நோயாளிகளின் தேவைகள் மாறும்போது, அவர்கள் இந்த இரு இல்லங்களுக்கும் இடையே மிக எளிதாக மாற முடியும் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக மனச்சிதைவு, இருமனத் தடுமாற்றம், கடுமையான மனச்சோர்வு போன்ற தீவிர மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நபர்களுக்குப் பாதுகாப்பான புகலிடமாக மனநலக்கழகம் (ஐஎம்எச்) இருந்து வருகிறது.
அங்கு தங்கியிருக்கும் பலருக்கு வீடோ, சமூக ஆதரவோ இல்லாத நிலையில் கழகம் மிகவும் நிலையான, அவர்கள் வயதாகும் இடமாகவே மாறிவிட்டது.
ஏறக்குறைய 2,000 படுக்கைகள் கழகத்தில் உள்ளன. இங்கு 10 அல்லது 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிலர் தங்கியிருப்பதால் மருத்துவ வார்டுகள் வாழும் குடியிருப்புகளாக மாறியுள்ளன. மேலும் நீண்டகாலம் அங்கு தங்கியிருக்கும் நோயாளிகளுக்கு வயதாகி வருகிறது. அவர்களின் சராசரி வயது 58. 83 நோயாளிகள் ஏற்கெனவே 70 அல்லது அதற்கு மேற்பட்ட வயதைக் கடந்தவர்கள் என்று திரு ஓங் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய நோயாளிகளில் பலருக்கு அவர்களின் உடல்நிலை சீரடைந்துள்ளது. மேலும் அவர்கள் மிகவும் பலவீனமடைந்து, அறிவாற்றல் ரீதியாகக் குன்றும்போது, பதற்றமடையும் நிகழ்வுகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
அவர்களுக்குத் தீவிர மனநலச் சிகிச்சையைவிட, அதிகக் கண்காணிப்பு, தாதியர் பராமரிப்பு, அன்றாட வாழ்க்கைப் பணிகளுக்கான உதவியே தேவைப்படுவதால், சிங்கப்பூர் ஏற்கெனவே அவர்களைச் சரியான பராமரிப்பு இடங்களுக்கு மாற்றத் தொடங்கியுள்ளது.
உதாரணமாக, வீடு போன்ற உணர்வைத் தரும் ‘சன்லவ்’, ‘செயின்ட் ஆண்ட்ரூஸ்’ போன்ற தாதிமை இல்லங்களுக்கு அவர்கள் மாற்றப்படுகிறார்கள் என்று அமைச்சர் ஓங் விளக்கினார்.
