துவாஸ் சோதனைச்சாவடி வழியாகப் பயணம் செய்யும் மோட்டார் சைக்கிளோட்டிகளும் பின்னிருக்கை பயணிகளும் முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குடிநுழைவு அனுமதியை விரைவாகப் பெறலாம்.
சோதனைச்சாவடியில் உள்ள 80 தானியக்க வருகை, புறப்பாடு தடங்களிலும் முக அடையாளம் காணும் வசதி உள்ளதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
சிங்கப்பூர் வாசிகள், நீண்டகால அனுமதி அட்டைதாரர்கள், இதற்கு முன்பு சிங்கப்பூருக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகள் புதிய வசதியைப் பயன்படுத்தலாம்.
முதன்முறையாக வரும் வெளிநாட்டுப் பயணிகள் அல்லது தங்களின் முந்தைய பயணத்திலிருந்து வேறுபட்ட கடவுச்சீட்டுடன் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகள் வழக்கமான முறையில் குடிநுழைவு அனுமதி பெற வேண்டும்.
விரைவான, மிகவும் பாதுகாப்பான குடிநுழைவு அனுமதியை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முறை செயல்படுகிறது.
கடந்த மார்ச் 31ஆம் தேதியன்று உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியின் வருகைப் பகுதியில் உள்ள 18 தானியக்க மோட்டார் சைக்கிள் தடங்களில் முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் உள்ள 70 தானியக்க வருகை, புறப்பாடு மோட்டார் சைக்கிள் தடங்களுக்கும் இந்த முறை படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று ஆணையம் அப்போது கூறியிருந்தது.
புதிய முக அடையாளம் காணும் முறையானது, உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் மோட்டார் சைக்கிள்களுக்கான அனுமதி நேரத்தை 30 விநாடிகளிலிருந்து கிட்டத்தட்ட 20 விநாடிகளாகக் குறைக்கிறது.
