பகுதி மின்கடத்தித் துறை சார்ந்த பெருநிறுவனமான ‘அப்ளைடு மெட்டீரியல்ஸ்’ சிங்கப்பூரில் தனது புதிய ஆலையைத் திறந்து உற்பத்திப் பரப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.
சில்லு-உருவாக்க இயந்திரங்கள் இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். இதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக 1,000 வேலைகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய தெம்பனிஸ் வளாகம், 500 மில்லியன் அமெரிக்க டாலர் (S$644 மில்லியன்) செலவில் கட்டப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் அது அமைக்கப்பட்டுள்ளதாகப் புதன்கிழமை (ஜூன் 10) அந்நிறுவனம் தெரிவித்தது.
திறப்பு விழாவில் பேசிய துணைப் பிரதமர் கான் கிம் யோங், கணினிச் சில்லுத் துறையில் செயற்கை நுண்ணறிவால் கணினி ஆற்றல், பகுதி மின்கடத்திச் செயல்திறனுக்கான தேவை அதிகரிப்பதுடன் புதிய வாய்ப்புகளும் உருவாகி வருவதாகக் கூறினார்.
இந்த வாய்ப்புகளைக் கைப்பற்ற, நிறுவனங்கள் தங்களின் அதிமுக்கிய நடவடிக்கைகளை நிலைநிறுத்தவும், சிறந்த திறனாளர்களைப் பெறவும், நீண்டகால அடிப்படையில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யவும் நம்பகமான தளங்கள் தேவைப்படும் என்றும் அவர் விவரித்தார்.
புதிய தெம்பனிஸ் வளாகத்தில், தானியக்க நடமாட்ட இயந்திர மனிதக் கருவிகள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் செயல்படும் தரச் சோதனை நடைமுறை போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வேளையில், சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (SIT), ‘அப்ளைடு மெட்டீரியல்ஸ்’ நிறுவனத்துடன் ஆய்வு, திறன் மேம்பாட்டுக்கான உத்திபூர்வப் பங்காளித்துவத்தைத் தொடங்கியுள்ளது.
இப்பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டக்கல்வி பயிலும் வசதி குறைந்த குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களுக்கான கல்வி உதவி நிதியையும் அது வழங்கவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்துடனும் அந்நிறுவனம் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுகிறது.

