கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இவ்வாண்டு ஆர்ச்சர்ட் சாலையில் நடைபெற இருக்கும் ஒளியூட்டு விழாவில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மின்மினித் தோட்டமும் பனி நிகழ்ச்சியும் வெவ்வேறு மதுபானக்கூடங்களில் நுழைய வகைசெய்யும் ‘கடப்பிதழ்கள்’ முதலியவை புதிய அம்சங்களில் அடங்கும்.
‘கிறிஸ்துமஸ் ஆன் எ கிரேட் ஸ்திரீட்’ என்று அழைக்கப்படும் இந்த வருடாந்திர ஒளியூட்டு விழாவை ஆர்ச்சர்ட் சாலை வர்த்தகச் சங்கம் ஏற்பாடு செய்கிறது.
இவ்வாண்டு கிறிஸ்துமஸ் தினத்துக்கு முதல்நாள் கொண்டாட்டமும் மீண்டும் நடத்தப்படுகிறது.
இயோன் ஆர்ச்சர்ட்டிலிருந்து நீ ஆன் சிட்டி வரை 400 மீட்டர் தூரத்துக்குக் கொண்டாட்டம் களைகட்டும்.
இசை நிகழ்ச்சிகள், கடைகள், உணவு வாகனங்கள் என மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 24ஆம் தேதியன்று மாலை 6 மணி முதல் பேட்டர்சன் சாலைச் சந்திப்புக்கும் பைட்ஃபோர்ட் சாலைச் சந்திப்புக்கும் இடைப்பட்ட ஆர்ச்சர்ட் சாலையின் ஒரு பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாது.
அந்தச் சாலைப் பகுதி டிசம்பர் 25ஆம் தேதியன்று போக்குவரத்துக்கு மீண்டும் திறந்துவிடப்படும்.


