புக்கிட் பாத்தோக் வெஸ்ட், பொங்கோல் கோஸ்ட்டில் புதிய உணவு அங்காடி நிலையங்கள்

2 mins read
b20fa274-c7e9-4bf0-8824-e9c5f68046ba
புதிய புக்கிட் பாத்தோக் வெஸ்ட் உணவு அங்காடி நிலையம் 469 புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 9ல் அமைந்துள்ளது. - படம்: தேசிய சுற்றுப்புற வாரியம்

சிங்கப்பூரில் மேலும் இரண்டு உணவு அங்காடி நிலையங்கள் இவ்வாண்டின் முற்பாதியில் திறக்கப்படுகின்றன.

அவை புக்கிட் பாத்தோக் வெஸ்ட், பொங்கோல் கோஸ்ட் ஆகிய வட்டாரங்களில் அமைந்திருக்கும்.

அடுத்த சில ஆண்டுகளில் தற்போதுள்ள அல்லது புதிய குடியிருப்புப் பேட்டைகளில் மேலும் ஐந்து உணவு அங்காடி நிலையங்கள் திறக்கப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சும் தேசிய சுற்றுப்புற வாரியமும் தெரிவித்தன.

இந்த ஐந்து உணவு அங்காடி நிலையங்கள் கட்டப்படும் இடங்கள் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

469 புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 9ல் உள்ள உணவு அங்காடி நிலையத்தில் 22 சமைத்த உணவுக் கடைகளும் 400 இருக்கைகளும் இருக்கும்.

84 பொங்கோல் வேயில் உள்ள உணவு அங்காடி நிலையத்தில் 40 சமைத்த உணவுக் கடைகளும் 680 இருக்கைகளும் இருக்கும்.

பழைய உணவு அங்காடி நிலையங்களைப் புதுப்பிக்கவும் புதியவற்றைக் கட்டவும் முதலீடு செய்யப்படும்.

உணவு அங்காடி நிலையங்கள் மேம்பாட்டுத் திட்டம் 2.0ன்கீழ் அடுத்த 20லிருந்து 30 ஆண்டுகள் வரை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சும் தேசிய சுற்றுப்புற வாரியமும் $1 பில்லியன் வரை முதலீடு செய்யும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் தெரிவித்தார்.

“மக்களின் தேவைகள் மாறி வருகின்றன. உணவு அங்காடி நிலையங்கள் புத்துயிரூட்டப்பட வேண்டும். அவை எதிர்காலத்துக்குத் தயாராக இருக்க வேண்டும். பருவநிலை மாற்றம், மூப்படையும் மக்கள் தொகை, விரைவான நகர மேம்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் மற்றும் உணவு அங்காடி நிலையக் கடைக்காரர்களின் எதிர்பார்ப்புகள் மாறிவிட்டன,” என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறினார்.

இதற்கிடையே, அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்களால் வழிநடத்தப்படும் ஒவ்வோர் உணவு அங்காடி நிலைய, ஈரச்சந்தை கடைக்கும் ஒருமுறை வாடகை ஆதரவாக $600 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்