உணவுப் பாதுகாப்பை நிர்ணயிக்க ஜனவரி 19 முதல் புதிய கட்டமைப்பு

2 mins read
3d21c76e-ebd5-44d2-98ed-ab7a2745435b
புதிய முறைப்படி, உணவுப் பாதுகாப்பை தொடர்ந்து கடைப்பிடிக்கும் உணவுக் கடைகளுக்கு அதிகமான மதிப்பெண்கள் வழங்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உணவுப் பாதுகாப்பைத் தரப்படுத்தும் புதிய முறை ஜனவரி 19ல் நடப்புக்கு வருகிறது.

அதற்காக, ‘உணவுக் கடைகளுக்கான பாதுகாப்பு உத்தரவாதக் கட்டமைப்பு’ (SAFE) என்னும் புதிய முறை உருவாக்கப்பட்டு உள்ளது.

தற்போது உணவுக் கடைகளின் உணவுப் பாதுகாப்பு பற்றி ஆண்டுதோறும் மதிப்பிட்டு அவற்றுக்குத் தரக் குறியீடு வழங்கப்படுகிறது.

புதிய கட்டமைப்பின்படி, உணவுப் பாதுகாப்பைத் தொடர்ந்து சிறப்பான முறையில் கடைப்பிடிக்கும் உணவுக் கடைகளைக் கண்டறிந்து அவற்றை ஊக்குவிக்கும் வகையில் தரக் குறியீடு வழங்கப்படும்.

இந்த விவரங்களை சிங்கப்பூர் உணவு அமைப்பு (எஸ்எஃப்ஏ) புதன்கிழமை (ஜனவரி 7) தெரிவித்தது.

புதிய தர மதிப்பீட்டு முறை, சிங்கப்பூர் உணவு அமைப்பின் உரிமம் பெற்ற 45,000 உணவு நிறுவனங்களுக்குப் பொருந்தும்.

உணவகங்கள், உணவுக் கடைகள், உணவு விநியோகிப்பாளர்கள், ரொட்டிக் கடைகள், உணவு வண்டிகள் போன்றவை அத்தகைய நிறுவனங்கள்.

உணவுப் பாதுகாப்பை நிர்ணயிக்கும் தற்போதைய தர மதிப்பீட்டு முறை முப்பதாண்டுகளுக்கு மேலாக நடப்பில் உள்ளது. ஆண்டுதோறும் உணவுக் கடைகளின் தரம் மதிப்பிடப்பட்டு, அவற்றுக்கு ஏ, பி, சி, டி என தரக் குறியீடு வழங்கப்படுகிறது.

உணவுக் கடைகளின் ஒட்டுமொத்த சுகாதாரம், தூய்மை, பொருள்களை அடுக்கி வைக்கும் முறை ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றின் தரம் மதிப்பிடப்படுகிறது.

இந்த அம்சங்களில் 85 விழுக்காட்டுக்கு மேல் மதிப்பெண் பெறும் கடைகளுக்கு ‘ஏ’ தரக் குறியீடும், 70 முதல் 85 விழுக்காடு வரையிலான மதிப்பெண்களைப் பெறும் கடைகளுக்கு ‘பி’ குறியீடும் வழங்கப்படுகிறது.

50 முதல் 69 விழுக்காடு வரையிலான மதிப்பெண் பெறும் கடைகளுக்கு ‘சி’ குறியீடும் 40 முதல் 49 வரையிலான மதிப்பெண்களுக்கு ‘டி’ குறியீடும் வழங்கப்படுகிறது.

இந்தத் தர மதிப்பீடு ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படுவதால், உணவுக் கடைகள் எல்லா நாள்களிலும் அதே தரத்தைக் கடைப்பிடிக்கின்றனவா என்பதை தர மதிப்பீட்டு முறை பிரதிபலிக்கவில்லை.

புதிய முறைப்படி, உணவுப் பாதுகாப்பை ஒவ்வொருநாளும் கடைப்பிடிக்கும் உணவுக் கடைகளுக்கு அதிகமான மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று எஸ்எஃப்ஏ கூறியுள்ளது.

உணவுக் கடைகளில், எஸ்எஃப்ஏ உரிமத்துடன் கியூஆர் குறியீடு ஒன்றும் வழங்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் அதனை வருடி, அந்தந்தக் கடைகளின் தர மதிப்பீட்டைத் தெரிந்துகொள்ளலாம். அல்லது go.gov.sg/sfa-track-records என்னும் இணையத்தளம் வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்