தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
மோசடி இழப்புகளுக்கு நிதி நிறுவனங்களையும் தொலைத் தொடர்பு நிறுவனங்களையும் பொறுப்பேற்கச் செய்யும் நடவடிக்கை

மோசடிகளைத் தடுக்க டிசம்பரில் புதிய கட்டமைப்பு அறிமுகம்

2 mins read
cce78e2a-662a-4f99-9b52-8897843779e7
 $25,000க்கு மேற்பட்ட, சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை வங்கிகள் தடை செய்ய வேண்டும் அல்லது 24 மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என புதிய கட்டமைப்பு வலியுறுத்துகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இணைய மோசடியில் ஏற்படும் இழப்பை வங்கி போன்ற நிதி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எந்த வகையில் பகிர்ந்துகொள்ளலாம் என்பதை விளக்கும் புதிய கட்டமைப்பு டிசம்பர் 16ஆம் தேதி அறிமுகம் காண்கிறது.

சிங்கப்பூரில் மோசடிச் சம்பவங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிதி நிறுவனங்களையும் தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் அந்தக் கட்டமைப்பு பொறுப்பேற்கச் செய்யும்.

அதன்படி, $25,000க்கு மேற்பட்ட, சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை வங்கிகள் தடை செய்ய வேண்டும் அல்லது 24 மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும்.

வங்கிக் கணக்குகளில் பெரிய தொகைகளை போட்டு வைத்திருப்போரின் பணம், அவர்களுக்குத் தெரியாமலேயே திடீரென்று மாயமாய் மறையும் சம்பவங்களை படிப்படியாகக் குறைக்க, வங்கிகள் மேற்கொள்ளும் நிகழ்நேர மோசடிக் கண்காணிப்பின் ஒரு பகுதியாக அந்நடவடிக்கை இருக்க வேண்டும் என சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்து உள்ளது.

சிங்கப்பூரின் மின்னலக்க வங்கி முறை மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் நடைபெற்று வரும் மோசடிச் சம்பவங்களுக்கு எதிராகச் செயல்பட ஆணையம் வியாழக்கிழமை (அக்டோபர் 24) அறிவித்த ‘பொறுப்புப் பகிர்வு கட்டமைப்பில்’ (SRF) இதுபோன்றவை இடம்பெற்று உள்ளன.

மோசடிகளுக்கு எதிராக தற்போது நடப்பில் உள்ள நடவடிக்கைகளும் புதிய கட்டமைப்பில் சேர்க்கப்பட்டு உள்ளன.

உதாரணத்திற்கு, பெரிய வங்கிகளின் வாடிக்கையாளர்கள் நம்பகமற்ற முறைகளில் பதிவிறக்கம் செய்த கைப்பேசிச் செயலியைப் பயன்படுத்த அந்த வங்கிகள் தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகள் அவை.

டிசம்பர் 16ஆம் தேதி நடப்புக்கு வந்த பின்னர் ஆறு மாத காலத்திற்குள் அதனை அமல்படுத்த வங்கிகளுக்கு அவகாசம் வழங்கப்படும் என ஆணையம் தெரிவித்து உள்ளது.

நிதி நிறுவனங்களும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மோசடித் தடுப்பில் தங்களது கடமைகளை நிறைவேற்றத் தவறும்போது மோசடியில் இழந்த தொகையை அந்த இரு அமைப்புகளும் இணைந்து பாதிக்கப்பட்டோருக்கு வழங்க வேண்டும்.

அந்தத் தொகையை அவ்விரு அமைப்புகளும் எவ்வாறு பகிர்ந்துகொள்ளலாம் என்ற விவரம் புதிய கட்டமைப்பில் இடம்பெறும்.

குறிப்புச் சொற்கள்