கரையோரப் பூந்தோட்டத்தில் நீடித்த நிலைத்தன்மை அம்சங்கள் கொண்ட புதிய தோட்டம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.
கூடைப்பந்துத் திடலின் அளவைக் கொண்ட அந்த மழைத் தோட்டத்தில் வெள்ளத்தைச் சகிக்கக்கூடிய தாவரங்களுக்கு இடையே கண்கவர் வண்ணத்துப்பூச்சிகள் வாழ்கின்றன.
அதிபர் தர்மன் சண்முகரத்னம் வியாழக்கிழமை (நவம்பர் 13) தோட்டத்தைத் திறந்துவைத்தார்.
தோட்டத்தில் உள்ள 1,200 சதுர அடி காட்சிக் கூடம் தோட்டத்தின் பசுமை முயற்சிகள் அனைத்தையும் எடுத்துக்கூறுகிறது. சூப்பர்டிரீ என்ற அமைப்பின் எரிசக்திப் பயன்பாட்டையும் தண்ணீர்ப் பயன்பாட்டையும் குறைப்பதிலிருந்து கழிவுகளைக் கட்டுக்குள் வைப்பது போன்ற அம்சங்கள் தோட்டத்தில் உள்ளன.
தோட்டத்தின் அழகைக் கண்டுகளிப்பதுடன் பசுமையை எவ்வாறு கட்டிக்காப்பது என்பதையும் வருகையாளர்கள் அறிந்துகொள்வர்.
மின்னிலக்கத் திரைகளில் நீடித்த நிலைத்தன்மை முயற்சிகள் பற்றி படித்து அறிந்துகொள்வதைத் தாண்டி தனிப்பட்ட பருவநிலை உறுதிமொழிகளையும் வருகையாளர்கள் மேற்கொள்ளலாம்.
ஜப்பானிய சோயா சாஸ் நிறுவனமான கிக்கோமென் சிங்கப்பூர், சூரியசக்தி ஆற்றல் கொண்ட கூடத்தை உருவாக்க $500,000 வழங்கியது.
2010ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய $1.5 மில்லியனை பூந்தோட்டங்களுக்கு நிறுவனம் நன்கொடையாகக் கொடுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதன் மூலம் கிங்ஃபிஷர் ஏரி மேம்படுத்தப்பட்டதுடன் கிங்ஃபிஷர் சதுப்புநிலம் உருவாக்கப்பட்டது. அங்கு 200க்கும் அதிகமான தாவரங்களும் மரங்களும் உள்ளன. கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்ளும் சதுப்புநிலமாகவும் அது திகழ்கிறது.
மழை பெய்யும்போது வெள்ளத்தில் அடித்துச்செல்லாத ஆற்றல்கொண்ட தாவரங்களால் மழை நீர் வடிகட்டப்படுகிறது. மழைநீர் மரினா நீர்த்தேக்கத்தைச் சென்றடையும் முன் தாவரங்கள் மூலம் நீரில் உள்ள மாசு அனைத்தும் நீக்கப்படுகிறது.
எரிசக்தியை மிச்சப்படுத்தும் தொழில்நுட்பங்கள் மூலம் கரையோரப் பூந்தோட்டத்தால் எரிசக்திப் பயன்பாட்டை 30 விழுக்காடு குறைக்க முடிந்தது.
தற்போது கரையோரப் பூந்தோட்டத்தில் பயன்படுத்தப்படும் 40 விழுக்காடு எரிசக்தி சூரியசக்தி போன்ற இயற்கை அம்சங்கள் மூலம் உற்பத்தியாகின்றன.

