தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொருள்களை அதிகமாகக் குவிக்கும் வீவக வீடுகளைக் கையாள புதிய அரசுப் பிரிவு

2 mins read
ae427363-9e9a-48b0-b471-8f9abff18cde
குறிப்பிடத்தக்க தீ ஆபத்து இருந்தால், வீவக, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையுடன் இணைந்து பதுக்கி வைக்கப்பட்டுள்ள எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் பறிமுதல் செய்யும்.  - படம்: பெரித்தா ஹரியான்

சமூக உறவுகள் பிரிவு (Community Relations Unit (சிஆர்யு) எனப்படும் புதிய அரசாங்கப் பிரிவு 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இருந்து செயல்படத் தொடங்கும். மேலும் குறிப்பிடத்தக்க தீ ஆபத்தை ஏற்படுத்தும் பொருள்களைச் சேமித்து, குவிக்கும் போக்குடையவர்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் அவற்றை அகற்றுவதற்கான கடைசி முயற்சியாக இது செயல்படும்.

அரசாங்கம் அண்மையில் சமூகச் சச்சரவுகள் தீர்வுச் சட்டத்தைத் (சிடிஆர்ஏ) திருத்தியது. இதன் மூலம், முதல் முறையாகத் தொடங்கப்பட்ட சமூக உறவுகள் பிரிவின் தலைமை இயக்குநர், அவ்வாறு வீடுகளில் குவிக்கப்பட்டிருக்கும் பொருள்களை அகற்ற, சமூகச் சச்சரவு நடுவர் மன்றங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் தெரிவித்தார்.

தற்போதுள்ள ஒழுங்குமுறை வரம்புகள் பயன்படுத்தப்பட்டும், பொருள்களைக் குவிக்கும் ஒருவர் முந்தைய சமூகச் சச்சரவு நடுவர் மன்றத்தின் உத்தரவை நிறைவேற்றத் தவறினால், இந்த விண்ணப்பம் மேற்கொள்ளப்படும் என்று பிப்ரவரி 27ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அமைச்சர் கூறினார்.

பொருள்களைக் குவிப்போரின் வீடுகளைக் கையாள்வதில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) மேற்கொள்ளும் நெறிமுறை, தீ அபாயம் உள்ள வீடுகளின் விவகாரத்தில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையுடன் அவர்கள் எவ்வாறு ஒருங்கிணைக்கிறார்கள், அத்தகைய நெறிமுறைகள் மதிப்பாய்வு செய்யப்படுகிறதா போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது திருவாட்டி சிம் ஆன் இவ்வாறு விளக்கமளித்தார்.

வீவக-வின் அதிகாரிகள், பொருள்களைக் குவிப்போரின் வீடுகளுக்குச் சென்று, பொருள்களைக் குவிப்போர் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் பணிபுரியும் பிற முன்கள நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்தல் ஆகியவை தற்போதுள்ள ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் அடங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

குறிப்பிடத்தக்க தீ ஆபத்து இருந்தால், வீவக, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையுடன் இணைந்து பதுக்கி வைக்கப்பட்டுள்ள எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் பறிமுதல் செய்யும்.

இந்த முயற்சிகள் நடைமுறையில் இருந்தாலும், பொருள்களைக் குவிப்போர், ஆய்வுகளை மேற்கொள்ள அதிகாரிகளை வீடுகளுக்குள் வர அனுமதிக்க மறுக்கும் அல்லது குப்பைகளை அகற்றும் முயற்சிகளில் ஒத்துழைக்க மறுக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன என்று திருவாட்டி சிம் ஆன் குறிப்பிட்டார்.

இதற்கும் மேலாக, அவர்களின் பழக்கவழக்கங்கள் அவ்வளவு விரைவாக மாறாததால் பொருள்களைக் குவிக்கும் போக்கு மீண்டும் நிகழக்கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளைக் கையாள்வதற்குத்தான் சமூக உறவுகள் பிரிவு அமைக்கப்பட்டது என்றும் அவர் விளக்கினார்.

எனவே, பொருள்கள் குவிக்கப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளில் அமலாக்கமும் ஒன்று என்று அமைச்சர் மேலும் கூறினார்.

“பொருள்களைக் குவிக்கும் போக்குக்கு, இன்னும் முழுமையான, நிலையான முறையில் தீர்வு காண்பதற்கு ஒரு முழுமையான சமூக அணுகுமுறை தேவை,” என்று அவர் மேலும் விவரித்தார்.

சமூக உறவுகள் பிரிவு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, பொருள்களைக் குவிக்கும் சம்பவங்களுக்குத் தீர்வு காண என்ன செய்யலாம் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “இத்தகைய சம்பவங்களுக்குத் தீர்வு காண நிறுவனங்களைப் பங்களிக்க இணைப்பதில் அடித்தள மற்றும் சமூகத் தொண்டூழியர்கள் மிகவும் ஆக்கபூர்வமான பங்கு வகிக்க வேண்டும்,” என்று அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்