சிங்கப்பூரில் அண்டைவீட்டாருக்கிடையே எழும் சச்சரவுகளுக்குக் கூடிய விரைவில் மேலும் சீராகத் தீர்வுகாணப்படும் என எதிர்பார்க்கலாம்.
அதற்கு வழிவகுக்கிறது இவ்வாண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படவுள்ள சமூக சர்ச்சை தீர்வு திருத்த மசோதா.
இந்த மசோதாவில் பல புதிய கூறுகள் அடங்கியுள்ளன.
அரசாங்கத்தின் புதிய சமூக உறவுகள் பிரிவு
முதலாவதாக, சத்தம் அல்லது பொருள்களைக் குவித்து வைத்தல் தொடர்பான சிக்கலான அண்டைவீட்டாருக்கு இடையிலான பூசல்களைத் தீர்க்க, சமூக உறவுகள் பிரிவு என்ற புதிய பிரிவு அமைக்கப்படவுள்ளது.
சட்ட அமலாக்கம், சமரசம் போன்றவற்றில் அனுபவம் கொண்ட சமூக உறவு அதிகாரிகள் இப்பிரிவில் இடம்பெற்றிருப்பர்.
அண்டைவீட்டாரிடம் வாக்குமூலம் பெறுவதிலிருந்து தொந்தரவைக் குறைக்க உத்தரவு பிறப்பிப்பதுவரை பல்வேறு நடவடிக்கைகளையும் அவர்களால் எடுக்கமுடியும்.
ஓராண்டுகால முன்னோடித் திட்டமாக இந்தப் பிரிவு தெம்பனிஸ் வீடமைப்பு வளரச்சிக் கழகப் பேட்டைகளில் தொடங்கப்படவுள்ளது.
சிக்கலான சச்சரவுகளில் கைகொடுக்கும் தொழில்நுட்பம்
சிக்கலான சச்சரவுகளில், அண்டைவீட்டார் அளவுக்கதிகமாக சத்தம் போடுகிறாரா என்பதைத் தீர்மானிக்க, புகாரளிப்பவரின் வீட்டில் சத்த உணர்கருவிகளை அதிகாரிகள் பொருத்தக்கூடும். ஆனால், அதற்கு அவ்வீட்டின் உரிமையாளரோ குடியிருப்பாளரோ ஒப்புதல் அளிக்கவேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
அதிகாரிகள் நகர மன்றத்தின் ஒப்புதலோடு தாழ்வாரங்களிலும் சத்த உணர்கருவிகளை வைக்கலாம்.
இந்த சத்த உணர்கருவிகள்மூலம் எத்திசையிலிருந்து, எந்நேரத்தில், எவ்வளவு சத்தம் வந்தது என்பதை அறிய முடியும். தரவுகள் சேகரிக்கப்பட்டதும் அசல் ஒலிப்பதிவு அழிக்கப்படும்.
“என் அண்டைவீட்டார் எட்டு ஆண்டுகளாக நள்ளிரவில்கூட சத்தம் போடுகின்றனர். காவல்துறையிடம் நான் இருமுறை புகாரளித்தும் சான்று இல்லாததால் மெய்ப்பிக்க முடியவில்லை. அதனால், இத்தொழில்நுட்பத்தை நான் வரவேற்கிறேன்,” என்றார் பிரிஷா எரிக்கா மோகன், 20.
சமூக சமரசத்தைக் கட்டாயப்படுத்துதல்
தற்போது, சமூக சமரச நிலையத்தில் பதிவாகும் சச்சரவுகளில் 30 விழுக்காட்டுக்கும் குறைந்தவையே சமரசத்துக்குச் செல்கின்றன. சச்சரவில் ஒரு தரப்பு சமரசப் பேச்சை விரும்பாததே அதற்குக் காரணம்.
அதனால், கூடுதலான அண்டைவீட்டார் சச்சரவுகளுக்கு சமூக சமரசத்தைக் கட்டாயப்படுத்தும் சமரச ஆணையை மசோதா முன்மொழிகிறது. இந்த ஆணைக்கு இணங்காவிட்டால் அதிகபட்சம் S$1,500 அபராதம் விதிக்கப்படும்.
இந்த ஆணையை விடுக்கும் அதிகாரத்தை சமூக உறவுகள் பிரிவு, சமூக சமரச நிலையம் போன்ற அமைப்புகள் பெறும்.
சமூக சர்ச்சை தீர்வு மன்றங்களின் ஆற்றல்களை அதிகரித்தல்
சமூக உறவுகள் பிரிவின் இடையீடுகள், சமூக சமரசம் மூலம் தீர்வுகாண முடியாவிடில் சமூக சர்ச்சை தீர்வு மன்றங்கள் கைகொடுக்கும்
இம்மசோதாவின்படி, அவை தீர்ப்பளிக்கும்போது சமூக உறவு அதிகாரிகளின் ஆதாரங்களைக் கருத்தில் கொள்ளலாம். இடைக்கால உத்தரவுகள், கட்டாய சிகிச்சை உத்தரவுகளையும் அவை விதிக்கலாம். வாடகைக்கு இருப்பவர் அண்டைவீட்டாருக்கு தொந்தரவளிக்கும்போது, சமூக சர்ச்சை தீர்வு மன்றங்களின் செயல்பாடுகளின் முந்தைய கட்டங்களிலேயே அவ்வீட்டின் உரிமையாளரை ஈடுபடுத்தலாம்.
மசோதாவுக்கு வித்திட்ட கருத்தாய்வு
கடந்த 2023 மே மாதம் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு, சட்ட அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு ஆகியவை இணைந்து, ‘ரீச்’ கருத்தறியும் பிரிவு மூலம் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களிடமிருந்து சமூக சர்ச்சை நிர்வாகக் கட்டமைப்பு குறித்த கருத்துகளைப் பெற்றன.
ஜூலை 2023 முதல் ஜனவரி 2024 வரை 30 குழுக் கலந்துரையாடல்களை நடத்தி, பொதுமக்கள், கல்வியாளர்கள், சமூக சமரச நிபுணர்கள் என 200க்கும் மேற்பட்டோரின் கருத்துகளையும் அமைச்சுகள் பெற்றன.