வருங்காலத்தில் அதிநவீன குவான்டம் கணினிகளிடமிருந்து தங்களின் கட்டமைப்பைப் பாதுகாத்துக்கொள்ள புதிய மானியத்தைப் பயன்படுத்தலாம்.
குவான்டம் கணினி முறைகள், தனிப்பட்ட தகவல்களையும் மின்னிலக்கப் பரிவர்த்தனைகளையும் பாதுகாக்கும் என்கிரிப்ஷன் முறையில் குறுக்கிடக்கூடியவை.
குவான்டம்-பாதுகாப்பு தொடக்க நடவடிக்கை மானியம் (Quantum-Safe Kickstarter Grant) என்ற மானியத்தை சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு தொடங்கி வைத்தது. இந்த மானியத்துக்கு எல்லா நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம். வங்கி மற்றும் நிதி, எரிசக்தி, தகவல் தொடர்பு போன்ற துறைகளில் இருக்கும் முக்கியத் தகவல் கட்டமைப்புகளைக் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
70% செலவு ஏற்றுக்கொள்ளப்படும்
இந்த மானியம், ஒரு திட்டத்தின் 70 விழுக்காடு வரையிலான செலவுக்குப் பயன்படுத்தலாம். குறைந்தது 30 விழுக்காட்டுச் செலவை நிறுவனம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ சிங்கப்பூர் அனைத்துலக இணைய வாரத்தின் இரண்டாம் நாளான புதன்கிழமை (அக்டோபர் 14) புதிய மானியத்தைப் பற்றி அறிவித்தார். இந்த முயற்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
“குவான்டம் முறைகளைக் கருத்தில்கொள்ளும்போது சிக்கலான முறைகளில் கிரிப்டோகிராஃபி அம்சத்துக்கு மாற்று ஏற்பாட்டைச் செய்யப் போதுமான காலம் இல்லாதிருக்கிறது. இதற்கு விரைவில் பணிகளைத் தொடங்கவேண்டும்,” என்றார் திருவாட்டி டியோ.
குவான்டம் முறைகளிலிருந்து வரக்கூடிய இணையத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்படும் கட்டமைப்புகள் அதற்காக கிரிப்டோகிராஃபிக் அம்சங்களைப் பயன்படுத்தி வருகின்றன.
இப்போதே தயாராகிக்கொள்ள அறிவுரை
பொதுவாகப் பயன்படுத்தப்படும் என்கிரிப்ஷன் முறைக்கு இடையூறு விளைவிக்கும் ஆற்றல் குவான்டம் கணினிகளுக்கு எப்போது வரும் என்பது இப்போதைக்குத் தெரியாது. எனினும், அதை எதிர்கொள்ள நிறுவனங்கள் இப்போதே தயாராகிக்கொள்ளவேண்டும் என்று சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு சுட்டியது.
இம்மாற்றத்தைச் செய்ய காலம் ஆகும். கிரிப்டோகிராஃபி, பல்வேறு கட்டமைப்புகளிலும் உள்கட்டமைப்புகளிலும் சேர்க்கப்பட்டிருப்பது இதற்குக் காரணம். பெரும்பாலான வேளைகளில் அவை, பல தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் சம்பந்தப்பட்டிருக்கும்.
ஆலோசனை அறிக்கை
இதன் தொடர்பில் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு புதன்கிழமை ஆலோசனை அறிக்கையை வெளியிட்டது. அனைத்துலக வழிகாட்டுதலைப் பின்பற்றி, குவான்டம் கணினி முறைகளால் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ள நிறுவனங்கள் 2027ஆம் ஆண்டுக்குள் கட்டமைப்பு மாற்றத் திட்டங்களை வரைந்து 2035க்குள் அதைச் செய்து முடிக்குமாறு அந்த ஆலோசனை அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
