சோல்: சிங்கப்பூர், சிலி, நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் புதிய பசுமை வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
பசுமை பொருளியல் பங்காளித்துவ ஒப்பந்தம் (Gepa) என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) கையெழுத்தானது.
நீடித்த நிலைத்தன்மை கொண்ட விமான எரிபொருள், கரியமிலப் புள்ளிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சான்றிதழ்கள் ஆகிய பல பிரிவுகளில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மூன்று நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், சிலி அதிபர் கேப்ரியல் போரிக், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகியோரின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
தென்கொரியாவில் நடந்து வரும் ஏபெக் உச்சநிலை மாநாட்டின் போது மூன்று நாட்டுத் தலைவர்களும் புதிய பசுமை வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டனர்.
“இதுபோன்ற ஒப்பந்தங்கள் வர்த்தகத்தை நவீனப்படுத்தும், பொருள் மற்றும் சேவைகளுக்கான முதலீட்டு கொள்கைகளுக்கு ஆதரவு கிடைக்கும்,” என்று பிரதமர் வோங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“இந்த ஒப்பந்தம் மூலம் பசுமை பொருளியலுக்குக் கீழ் செயல்படும் நிறுவனங்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதேபோல், புதிய வேலைகளும் உருவாகும். பசுமை வர்த்தகத்திற்கு மாறும்போது சவால்களும் குறையும்,” என்று திரு வோங் சொன்னார்.
“கடந்த காலத்தில் வளர்ச்சிக்கும் நீடித்த நிலைத்தன்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளதால் தேவைகளும் மாறியுள்ளன,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் புதிய ஒப்பந்தத்தை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கையெழுத்திட்டார். சிலி சார்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அல்பெர்டோ வான் கிளாவெரன், நியூசிலாந்து சார்பில் அந்நாட்டின் வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் டாட் மெக்லே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
சிலி மற்றும் நியூசிலாந்துடன் சிங்கப்பூர் பங்காளித்துவ ஒப்பந்தம் மேற்கொண்டது பெருமையளிக்கிறது என்றார் பிரதமர் வோங்.

