இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு அவசர உதவி வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படும் நோயாளிகள் இனி விரைவாக சிகிச்சைபெற புதிய சாலைத் திட்டம் அறிமுகமாகவுள்ளது.
‘டிபிஎஸ்’ என்று அழைக்கப்படும் போக்குவரத்து முன்னுரிமை திட்டம் மூலம் அது சாத்தியமாகும். அந்தத் திட்டம் இம்மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (ஜூலை 4) அன்று நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடந்த வேலைத்திட்ட கருத்தரங்கில் இந்தத் தகவலைக் குடிமைத் தற்காப்புப் படை வெளியிட்டது.
தற்போது அவசர உதவி வாகனங்கள், மருத்துவமனை அருகே உள்ள சாலைச் சந்திப்புகளில் சிவப்பு விளக்கு விழும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளும் அபாயம் அதிகம் உள்ளது, அல்லது சிவப்பு விளக்கு இருந்தாலும் வாகனங்கள் அதை எச்சரிக்கையுடன் கடந்து செல்ல வேண்டியிருக்கும். இது ஒரு சில நிமிட தாமதங்களை ஏற்படுத்தும்.
இதைத் தவிர்க்க ‘டிபிஎஸ்’ திட்டம் உதவும். மருத்துவமனை அருகே உள்ள சாலைச் சந்திப்புகளில் உள்ள ஒரு தடம் ‘பச்சை வழி’ தடமாக மாற்றப்படும். அதில் அவசர உதவி வாகனங்கள் சிவப்பு விளக்கால் தாமதம், போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை எதிர்கொள்ளாமல் விரைவாக மருத்துவமனைகளுக்குள் செல்லலாம்.
இந்தத் திட்டம் முதலில் கூ டெக் புவாட் மருத்துவமனை, இங் டெங் ஃபோங் மருத்துவமனை அருகே சோதிக்கப்பட்டது. இதில் சராசரியாக ஒவ்வொருமுறையும் அவசர உதவி வாகனம் 30 நொடிகள் முதல் 100 நொடிகள் வரை மருத்துவமனைக்கு வரும் நேரத்தை மிச்சப்படுத்துவதாக கண்டறியப்பட்டது. இதன் மூலம் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் சாத்தியம் அதிகரிக்கும்.
இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு அருகே உள்ள நான்கு சாலைச் சந்திப்புகளில் ‘டிபிஎஸ்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தற்போது சிங்கப்பூரில் இங் டெங் ஃபோங் மருத்துவமனை அருகே மட்டும் இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கூ டெக் புவாட் மருத்துவமனை, சாங்கி பொது மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றின் அருகே உள்ள சாலை சந்திப்புகளிலும் ‘டிபிஎஸ்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வரும் 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் கே கே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனை, செங்காங் பொது மருத்துவமனை, சிங்கப்பூர் பொது மருத்துவமனை, டான் டொக் செங் மருத்துவமனை, உட்லண்ட்ஸ் சுகாதார வளாகம் ஆகியவற்றின் அருகே உள்ள சாலை சந்திப்புகளிலும் ‘டிபிஎஸ்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

