தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிகமானோருக்கு மனநலப் பிரச்சினையில் உதவ புதிய வழிகாட்டி

2 mins read
94fcafe6-6048-4911-9e32-7ab8a0f35e63
நமது தெம்பனிஸ் நடுவத்தில் நவம்பர் 16ஆம் தேதி நடந்த மனநலம் தொடர்பான நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் ஆல்வின் டான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இனி, மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகத்தில் உள்ளவர்கள் சிறந்த வகையில் ஆதரவு வழங்க முடியும். அதற்கான புதிய வழிகாட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மனநல ஆதரவு வழங்குவதற்காக தங்களுடைய சமூகத்தில் ‘நல்வாழ்வு வட்டங்கள்’ அமைக்க விரும்பும் குழுக்கள் இந்த வழிகாட்டியைப் பின்பற்றலாம். இதில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

எஸ்ஜி மனநல நல்வாழ்வு கட்டமைப்பின் லிங்க்டின் பக்கத்திலிருந்து மனநல ஆதரவு வழிகாட்டியை பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டி பற்றி கலாசார, சமூக, இளையர் துறை துணை அமைச்சர் ஆல்வின் டான் சனிக்கிழமை (நவம்பர் 16) அன்று சிங்கப்பூர் மனநலத்திற்கான சங்க நிகழ்ச்சியில் அறிவித்தார். இந்த நிகழ்ச்சி நமது தெம்பனிஸ் நடுவத்தில் நடைபெற்றது.

ஆதரவுக் குழுக்களுக்கு வழிகாட்டி எப்படி உதவும் என்பது பற்றி அமைச்சர் தமது உரையில் விவரித்தார்.

சமூகத்தில் மனநலம், மன ஆரோக்கியம் தொடர்பான தவறான எண்ணத்தைப் போக்குவதும் இத்தகைய பிரச்சினைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தேவையான தகுந்த ஆதரவு வழங்குவதும் புதிய வழிகாட்டியின் நோக்கம் என்றார் அவர்.

தங்களுடைய சமூகத்தில் நல்வாழ்வு வட்டங்களை அமைத்து ஆதரவு வழங்க விரும்பும் எவருக்கும் புதிய வழிகாட்டி உதவியாக இருக்கும். இதனால் சிங்கப்பூர் முழுவதும் மனநல ஆதரவு கிடைப்பதற்கு வழி ஏற்படும் என்றும் அமைச்சர் டான் மேலும் தெரிவித்தார்.

ஒரு நல்வாழ்வு வட்டத்தை அமைப்பது எப்படி, அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்த என்ன செய்ய வேண்டும் போன்ற நடைமுறைகள் வழிகாட்டியில் சொல்லப்பட்டுள்ளது. சமூக ‘நல்வாழ்வு வட்டங்கள்’ என்பது எஸ்ஜி மனநலக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாகும். இதற்கு வர்த்தக, தொழில் துணை அமைச்சருமான திரு டான் தலைமை வகிக்கிறார்.

கடந்த 2022ல் தொடங்கப்பட்ட இந்த தேசிய அளவிலான இயக்கம், சிங்கப்பூரில் உள்ள அனைத்து வயதினரின் மனநலனைப் பாதுகாப்பதற்காக குடிமக்களையும் சமூக சேவை நிறுவனங்களையும் மனநல ஆலோசனை அமைப்புகளையும் ஒன்றாக இணைத்து செயல்பட வைக்கிறது.

இது, குழந்தைகள், பதின்ம வயதினர், இளையர் ஆகியோரிடையே மீள்திறனை வலுப்படுத்து வதற்காக 2020ல் தொடங்கப்பட்ட இளையர் மனநலக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.

2022ஆம் ஆண்டிலிருந்து நல்வாழ்வு வட்டங்கள் மூலம் 600க்கும் மேற்பட்ட தனி நபர்கள் மனநலத்திற்கு ஆதரவளிக்கும் திறன்களைக் கற்றுக்கொண்டனர். இவர்கள், 3,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு உதவ பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்