சிங்கப்பூரில் உள்ள அறநிறுவனங்களும் லாப நோக்கமற்ற அமைப்புகளும் தங்கள் இலக்குகளையும் நிகழ்ச்சிகளின் தாக்கத்தையும் மதிப்பிட உதவும் புதிய வழிகாட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
‘த காய்ட் டு இம்பேக்ட் மெஷர்மன்ட்’ (The Guide to Impact Measurement) என்ற வழிகாட்டியை தேசிய தொண்டூழியர், கொடை நிலையமும் பந்தயப்பிடிப்புக் கழகமும் இணைந்து வெளியிட்டன.
வழிகாட்டி நடைமுறைக்கு ஏற்ற வகையில் இருப்பதை உறுதிசெய்ய 36 அறநிறுவனங்கள், ஏழு துறை சார்ந்த நிர்வாகிகள், ஏழு நிதி வழங்குனர் ஆகியோரின் கருத்துகள் திரட்டப்பட்டன.
அடுத்தவர்களின் வாழ்க்கையையும் சமூகத்தையும் மேம்படுத்துவதில் லாப நோக்கமற்ற அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார் கலாசார, சமூக, இளையர் துறை துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ்.
லாப நோக்கமற்ற அமைப்புகள் மாறிவரும் தேவைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப வளர ஆதரவளிப்பதைப் பார்க்க மகிழ்ச்சியளிப்பதாகவும் புதிய வழிகாட்டி நூல் தக்க சமயத்தில் வந்துள்ளது என்றும் திரு தினேஷ் சொன்னார்.
குறிப்பிட்ட திட்டம் மூலம் எத்தனை பேர் பயனடைந்தனர் என்பதற்கு அப்பாற்பட்டு லாப நோக்கமற்ற அமைப்புகள் ஏற்படுத்திய தாக்கத்தின் அளவை மதிப்பிட வழிகாட்டி நூல் உதவும் என்றார் அவர்.
லாப நோக்கமற்ற அமைப்புகள் குறைந்த வளங்களை இன்னும் திறம்பட பயன்படுத்துவதற்கும் வழிகாட்டி கைகொடுக்கும்.
சிங்கப்பூரில் கடந்த பத்தாண்டாக கூடுதலான அறநிறுவனங்கள் செயல்படுகின்றன. 2015ஆம் ஆண்டு 2,200ஆக இருந்த அறநிறுவனங்கள் எண்ணிக்கை 2023ன் முடிவில் 2,400க்கு உயர்ந்தது. அவற்றில் கிட்டத்தட்ட பாதி, சமயம் சாரா அறநிறுவனங்கள்.
தொடர்புடைய செய்திகள்
அறநிறுவனத் துறையின் ஒட்டுமொத்த வருவாய் 2013ஆம் ஆண்டு $13.9 பில்லியனாக இருந்தது. அது 2023ஆம் ஆண்டு $22.17 பில்லியனுக்கு அதிகரித்தது.
புவிசார் நிச்சயமற்றத்தன்மை, சமூக ஏற்றத் தாழ்வுகள் போன்றவற்றால் அதிகரித்து வரும் சிக்கல் நிறைந்த சூழலில் லாப நோக்கமற்ற அமைப்புகள் செலவு செய்யும் ஒவ்வொரு வெள்ளியும் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் பயன் தரக்கூடிய வகையில் இருக்கவேண்டும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டனர்.