பாலர் பள்ளி ஆசிரியர்களும் பெற்றோரும் இணைந்து செயல்பட புதிய வழிகாட்டி

பாலர் பள்ளி ஆசிரியர்களும் பெற்றோரும் இணைந்து செயல்பட புதிய வழிகாட்டி

3 mins read
ef8e46d2-f063-48b9-8115-7b2de71ce87f
'நாம் அருமையான பங்காளிகள்!’ எனும் பெற்றோர்-பாலர் பள்ளிப் பங்காளித்துவ வழிகாட்டியை வாசிக்கும் நித்யஸ்ரீ சுப்பிரமணியமும் அவரின் கணவர் தேஷரும். - படம்: சாவ்பாவ்

பெற்றோரும் பாலர் பள்ளி ஆசிரியர்களும் இணைந்து செயல்படவும் அவர்களுக்கு இடையேயான உறவில் ஏற்படும் சவால்களுக்குத் தீர்வுகாணவும் உதவும் ஒரு புதிய வழிகாட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெற்றோர், ஆசிரியர்கள், பாலர் பள்ளி நடத்துநர்கள், துறை சார்ந்த பங்காளிகளுடன் இணைந்து தொகுக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டி, குழந்தைகளுக்கு ஒரு நல்ல தொடக்கத்தை வழங்குவதில் தத்தம் பங்களிப்பைப் புரிந்துகொள்ள பலதரப்பினருக்கான வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளது.

குழந்தைகளின் ஆரம்பகாலக் கல்வியில் தொடர்ச்சி, சீரான பராமரிப்பு, மேம்பாட்டுத் திறன்களை ஆதரிப்பதற்காக, பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான கூட்டுறவை வலுப்படுத்துவதை இந்த வழிகாட்டி நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு வாரியம் தனது அறிக்கையில் தெரிவித்தது.

‘பிரிஸ்கூல் மார்க்கெட்’ என்ற கல்வி ஆலோசனை நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, வாரியத்தின் ஆதரவுடன் தோ பாயோ சாஃப்ராவில் சனிக்கிழமை (ஜூலை 18) நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த வழிகாட்டி அறிமுகமானது.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் கோ பெய் மிங், வீட்டிலும் பள்ளியிலும் உள்ள பெரியவர்கள் ஒரே நேர்கோட்டில் இணைந்து செயல்படும்போது, குழந்தைகள் வளர்வதற்கும் செழிப்பதற்கும் சாதகமான சூழல் கிடைக்கும் என்றார்.

தமது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்த திரு கோ, பாலர் பள்ளி 2ல் (K2) படிக்கும் தம் இளைய மகள் தலைமைத்துவப் பண்புகளைக் கொண்டிருப்பதாக அவளின் ஆசிரியர் மூலம் அறிந்த பிறகு, வீட்டில் அவள் மேலும் சில முயற்சிகளைத் தானாகவே எடுக்க தாம் அனுமதித்ததாகக் குறிப்பிட்டார்.

பெற்றோர், ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள், ஆய்வுகள் மூலம் கல்வியில் தங்களின் பங்கு என்ன என்பது குறித்துப் பெற்றோர் கூடுதல் தெளிவை விரும்புவது தெரியவந்துள்ளதாக திரு கோ கூறினார். அதேவேளையில், தங்களை வெறும் சேவை வழங்குநராக மட்டும் பார்க்காமல், ஒரு பங்காளியாகப் பார்க்க வேண்டும் என்று ஆசிரியர்கள் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குழந்தைகளுக்குச் சிறந்ததைச் செய்ய விரும்பும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த வழிகாட்டி ஒரு நடைமுறை வழியைக் காட்டுகிறது என்றார் அவர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

பெற்றோருக்கும் பாலர் பள்ளிகளுக்கும் இடையிலான பங்காளித்துவத்துக்கு அடிப்படையாக விளங்கும் நம்பிக்கை, மரியாதை, பிறர் நிலையறிந்து இரக்கப்படுவது ஆகிய மூன்று முக்கிய மதிப்புகளின் அடிப்படையில் இந்த வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது என்று வாரியம் தெரிவித்தது.

இந்த வழிகாட்டியின் அச்சுப் பிரதிகள், சிங்கப்பூர் முழுவதிலும் உள்ள ஏறத்தாழ 1,800 பாலர் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும். இதன் மின்னிலக்கப் பதிப்புகள், பாலர் பள்ளிகளின் தகவல் தொடர்பு ஊடகங்கள்வழி பெற்றோருக்குக் கிடைக்கும்.

புக்கிட் தீமா புளோக் 305ல் தம் மகள் பயிலும் பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ் பாலர் பள்ளியில், வெளிப்படையான தகவல் பரிமாற்றத்தின் நன்மைகளை நேரடியாக உணர்ந்தவர்களில் திருவாட்டி நித்யஸ்ரீ சுப்பிரமணியமும் ஒருவர்.

அவருக்கும் அவரின் கணவருக்கும் மாண்டரின் மொழி தெரியாது என்பதால், தொடக்கத்தில் தங்கள் மகள் எடுத்து வந்த மாண்டரின் வீட்டுப் பாடத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இத்தம்பதியினர் முதலில் மொழிபெயர்ப்புச் செயலிகளைப் பயன்படுத்தினர். ஆனால், இப்பிரச்சினை குறித்து ஆசிரியரிடம் கலந்தாலோசித்த பிறகு, பள்ளி நிர்வாகம் வீட்டுப் பாடத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்கியது.

சிறப்புக் கல்வித் தேவை அதிகாரியான திருவாட்டி நித்யஸ்ரீ, பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு போன்ற தளங்களை மட்டுமே நம்பியிருக்காமல், பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் மகளின் ஆசிரியர்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறினார்.

தங்கள் மகளின் செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ள இது பயனுள்ளதாக இருப்பதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்