பாலின முரண்பாடு தொடர்பில் புதிய வழிகாட்டுதல்: இளையர்க்கான சிகிச்சை தொடரும்

பாலின முரண்பாடு தொடர்பில் புதிய வழிகாட்டுதல்: இளையர்க்கான சிகிச்சை தொடரும்

2 mins read
09818886-ecc2-4e8d-aa28-107f10b50b39
மனநலக் கழகம், 2021 முதல் 2025 வரை ஆண்டுக்குச் சராசரியாக 18 வயதுக்குட்பட்ட 65 பேரிடம் பாலின முரண்பாட்டுப் பாதிப்பைக் கண்டறிந்துள்ளது. - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

பாலின முரண்பாட்டு மனவுளைச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவர்களும் வளரிளம் பருவத்தினரும், தங்கள் தற்போதைய மருத்துவ நிபுணர்களின் பராமரிப்பிலேயே தொடர்ந்து சிகிச்சைகளைப் பெற வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

புதிய சிகிச்சைக் குழுக்கள் அமைக்கப்பட்டு வரும் வேளையில், சிகிச்சையில் திடீர்த் தடை ஏற்படுவதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஐலீன் சோங், செங்காங் குழுத்தொகுதி எம்.பி. ஹீ திங் ரூ, அங் மோ கியோ குழுத்தொகுதி எம்.பி. விக்டர் லாய் ஆகியோரின் கேள்விகளுக்குப் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) அமைச்சர் ஓங் அளித்த பதிலில் இதனைப் தெளிவுபடுத்தினார்.

சிறுவர்களுக்கான புதிய வழிகாட்டுதல்களின்படி, உளவியல் ஆதரவே முதற்கட்ட சிகிச்சையாகக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பருவம் அடைவதைத் தடுக்கும் மருந்துகளுக்கு இனி அனுமதியில்லை. நோயாளிகளைப் பன்னோக்கு மருத்துவக் குழுவினர் ஆய்வுசெய்து, அவர்களுக்கான சிகிச்சைகளைத் தீர்மானிப்பர்.

இக்குழுக்கள் அமைக்கப்பட்டதும், ஒவ்வொரு நோயாளியின் நிலையும் தனித்தனியாக ஆய்வு செய்யப்படும்.

அதன் பிறகே சிகிச்சையைத் தொடர்வதா அல்லது மாற்றுவதா என்பது குறித்து கவனமாக முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் ஓங் தெரிவித்தார்.

புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்தாலும், தற்போதைய சிகிச்சைகள் தடைபடாமல் தொடர்வதை அமைச்சு உறுதிசெய்து வருகிறது. சிங்கப்பூரில் மனநலக் கழகம், 2021 முதல் 2025 வரை ஆண்டுக்குச் சராசரியாக 18 வயதுக்குட்பட்ட 65 பேரிடம் இப்பாதிப்பைக் கண்டறிந்துள்ளது.

பாலின முரண்பாட்டு மனவுளைச்சல் என்பது கவனமான மேலாண்மை தேவைப்படும் ஒரு நிலையாகும். நோயை முறையாகக் கண்டறியாமல் சிகிச்சை அளிப்பதும் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அதை மறுப்பதும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளதாக திரு ஓங் விளக்கமளித்தார்.

நோயைக் கண்டறிதல் திடமாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும்.

சிகிச்சை குறித்த முடிவுகள், கிடைக்கப்பெறும் சிறந்த மருத்துவச் சான்றுகளுடன் நோயாளியின் நலனைக் கருத்தில்கொண்டு எடுக்கப்படவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்