சிங்கப்பூரில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் 65 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ என்னும் எலும்பு அடர்த்திக் குறைபாட்டுக்கான பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அந்தக் குறைபாட்டால் ஏற்படக்கூடிய அபாயங்களைத் தெரிந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
உள்ளூர் மருத்துவர்களின் புதிய வழிகாட்டுதல்களின்படி அந்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, இந்நோய்க்கான பரிசோதனை குறித்து எந்தப் பரிந்துரைகளும் அளிக்கப்படவில்லை.
இந்த ஆண்டின் முற்பகுதியில் வெளியிடப்பட்ட, உடல்நலப் பரிசோதனை மறுஆய்வுக் குழுவின் அறிக்கையில், பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் பரிசோதனையை முன்கூட்டியே தொடங்குவது குறித்த பரிந்துரைகளும் இடம்பெற்றிருந்தன.
நோய்க்கான அறிகுறிகள் காணப்படாத 40 முதல் 49 வயது வரையிலான பெண்கள் ஆண்டுதோறும் மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனையைச் செய்துகொள்ளவும் 50 முதல் 74 வயது வரையிலான பெண்கள் ஈராண்டுக்கு ஒருமுறை அந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ளவும் தற்போது பரிந்துரைக்கப்படுகிறது.
இதற்கு முன்பு 50 முதல் 69 வயது வரையிலான பெண்கள் ஈராண்டுக்கு ஒருமுறை மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனை செய்துகொண்டால் போதும் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது.
இளவயதுப் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய்கள் பெரும்பாலும் தீவிரத்தன்மையைக் கொண்டிருப்பதால், புற்றுநோய் சந்தேகத்திற்கான கட்டிகளை முன்கூட்டியே கண்டறிவது பயனுள்ளதாக இருக்கும் என தற்போது கருதப்படுகிறது.
வேறு வகையான புற்றுநோய்களுக்கும் நீரிழிவு போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்குமான பரிசோதனை வழிகாட்டுதல்களும் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன.
‘ஹெல்தியர் எஸ்ஜி’ பரிசோதனைத் திட்டத்தின்கீழ் இந்தப் பரிந்துரைகளைச் சேர்ப்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன், தற்போது அவற்றை மறுஆய்வு செய்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட பரிசோதனைகளுக்கு மானியம் வழங்கப்படுமா என்பதும் இந்த மறுஆய்வு மற்றும் மதிப்பீட்டின் மூலம் தீர்மானிக்கப்படும்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட சா சுவீ ஹாக் பொது சுகாதாரப் பிரிவின் நிறுவன முதல்வரான சியா கீ செங், உடல்நலப் பரிசோதனை மறுஆய்வுக் குழுவுக்குத் தலைமை ஏற்றுள்ளார்.
அந்தக் குழுவில் 16 உள்ளூர் மருத்துவர்கள் உள்ளனர். கடைசியாக, கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளூர் பரிசோதனை வழிகாட்டுதல்களை அந்தக் குழு மறுஆய்வு செய்தது.


