சிங்கப்பூரில் வழக்கறிஞர்கள் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இனி புதிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) சட்ட அமைச்சுக்கான வரவு செலவுத் திட்டவிவாதத்தில் இது குறித்து துணையமைச்சர் முரளி பிள்ளை பேசினார்.
“சட்டத்துறையில் தொழில்நுட்பம் தாக்கத்தை ஏற்படுத்துவது பற்றி அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தை வழக்கறிஞர்கள் பயன்படுத்த அமைச்சு ஊக்குவிக்கிறது. ஆனால் அதே நேரம் அது பாதுகாப்பானதாகவும் பொறுப்பாகவும் இருக்க வேண்டும்,” என்று திரு முரளி குறிப்பிட்டார்.
சில நேரம் செயற்கை நுண்ணறிவு தவறான பதில்களைத் தரும் அல்லது கற்பனையான ஒரு தகவலைக் கொடுக்கும். மேலும் அவற்றில் தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்த கேள்வியும் உள்ளது. சில செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் நமது தரவுகளைச் சேகரிக்கின்றன, இது அடுத்த பயனீட்டாளர்களுக்கு வழங்கப்படலாம்,” என்று அமைச்சர் அக்கறை தெரிவித்தார்.
“இது நெறிமுறைகளை மீறலாம், மேலும் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே உள்ளது, அதனால் அதற்கான விதிமுறைகளைச் சரியாக இயற்ற வேண்டும்,” என்று திரு முரளி கூறினார்.
தற்போது சட்ட அமைச்சு புதிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகிறது. தொழில்நுட்பத்தைச் சிறப்பாகக் கையாள இது உதவும் என்று அவர் சொன்னார்.
புதிய வழிமுறைகள் குறித்து சட்ட அமைச்சு சிங்கப்பூர் நீதிமன்றங்கள், சிங்கப்பூர் சட்டக் கழகம், தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் உள்ளிட்டவற்றிடம் ஆலோசித்து உள்ளதாகவும் திரு முரளி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
ஏஐ தொழில்நுட்பத்தால் 2029ஆம் ஆண்டுக்குள் சட்டத்துறையில் உள்ளவர்களின் வேலை நேரத்தில் வாரம் கிட்டத்தட்ட 12 மணி நேரம் மிச்சமாகலாம் என்று ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கை கூறுகிறது.