பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமன்றி, வணிகத் தொடர்புகளையும் இளைய தலைமுறைத் தலைவர்களையும் உருவாக்கி, இளையர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்குடன் 168 ஆண்டுகள் பழமைவாய்ந்த சார் யோங் (டாபு) ஹக்கா குலவழிச் சங்கம் தனது புதிய உருமாற்றத்தைத் தொடங்கியுள்ளது.
கேலாங் வட்டாரத்தில் அமைந்துள்ள இச்சங்கத்தின் புதிய டாபு ஹக்கா ஏழு அடுக்குக் கட்டடம் அதிகாரபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. $70 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகம், அனைத்து வயதினருக்குமான ஹக்கா பாரம்பரிய மற்றும் சமூகச் செயல்பாடுகளின் மையமாக விளங்கும்.
இங்கு அரும்பொருளகம், நூலகம், சமையற்கலைக்கூடம் ஆகியவற்றுடன், தொழில்முனைப்பு மற்றும் நிபுணத்துவ மேம்பாட்டுத் திட்டங்களும் வழங்கப்படவுள்ளன. பாரம்பரியக் கட்டடக்கலை வடிவமான ‘துலோவ்’ (வட்டவடிவ மண் வீடு) பாணியில், இரண்டுரை ஆண்டுகள் கட்டுமானப் பணிக்குப்பின் கட்டப்பட்டுள்ள இந்த அதிநவீனக் கட்டடம், பசுமைத் தகுதிச் சான்றிதழைப் பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 3) நடைபெற்ற திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, மாறிவரும் தற்போதைய உலகச் சூழலில் குலவழிச் சங்கங்கள் அவற்றின் பாரம்பரிய நெறிமுறைகளில் உறுதியாக இருப்பதோடு, காலத்திற்கேற்பப் புதுமைகளையும் புகுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், இளையர்களை ஈர்க்கும் வகையில் பலதரப்பட்ட முற்போக்கான இணையவழிச் செயல்பாடுகளையும் திட்டங்களையும் சங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
1858ஆம் ஆண்டில் சீனாவின் குவாங்டோங் மாநிலத்தின் டாபு மாவட்டத்திலிருந்து சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த ஹக்கா மக்களின் நலன்களைப் பேண இச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் மறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, மூத்த அமைச்சர் லீ சியன் லூங் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் இந்த ஹக்கா சமூகப் பின்னணியைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

