தங்கள் ஊழியர்களுக்கு கூடுதல் மனநல ஆதரவு வழங்க நிறுவனங்களுக்கு வழிகாட்டும் புதிய கையேட்டை வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் வெளியிட்டுள்ளது.
ஊழியர் மனநலன் கருதி எத்தகைய வேலையிடக் கலாசாரத்தைப் பேணுவது, வேலையிட ஆதரவுத் திட்டங்களை எவ்வாறு உருவாக்குவது, மனநலப் பிரச்சினைகளிலிருந்து மீண்டுவரும் ஊழியர்களை எவ்வாறு நம்பிக்கையுடன் வேலைக்குத் திரும்பச் செய்ய உதவுவது போன்றவை குறித்த ஆலோசனைகள் இந்தக் கையேட்டில் இடம்பெறும்.
40 பக்கங்களைக் கொண்டுள்ள இந்தக் கையேட்டில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் உட்பட உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் காணப்படும் மனநல ஆதரவு தொடர்பான உதாரணங்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட அமைப்புகளும் நிறுவனங்களும், மனநலப் பிரச்சினைகளிலிருந்து மீண்டுவரும் ஊழியர்களுக்கு எவ்வாறு நம்பிக்கையுடன் வேலைக்குத் திரும்ப உதவின என்பதை அந்த உதாரணங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
கையேட்டில் இடம்பெறும் பரிந்துரைகள் நீக்குப்போக்கானவை. நிறுவனங்கள், தங்களுக்கு உகந்த பரிந்துரைகளைப் பயன்படுத்தலாம்.
வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றத்தின் மனநலக் குழுவின்கீழ் உள்ள முத்தரப்புச் செயற்குழு இப்பரிந்துரைகளை வரைந்தது. பல்வேறு குழுக்கள், மனிதவளப் பணியாளர்கள், சமூக சேவை அமைப்புகள் ஆகிய தரப்புகளுடன் பலமுறை ஆலோசனை மேற்கொண்ட பிறகு பரிந்துரைகள் வரையப்பட்டன.
திங்கட்கிழமையன்று நலம்பேணுவோர் கட்டமைப்பின் (Well-being Champions Network) தொடர்பு நிகழ்ச்சி ஒன்றில் கையேடு வெளியிடப்பட்டது. கனெக்சிஸ் கட்டடத்தில் இருக்கும் ஏஸ்டார் இன்ஃபியூஸ் (A*Star Infuse) அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு நிறுவனங்கள் மனநலன் சார்ந்த விவகாரங்களைப் பற்றி கலந்துபேசின.