சிங்கப்பூரின் காப்பிக் கடை கலாசாரம் அடைந்துள்ள மாற்றங்களைக் காட்சிப்படுத்தும் புதிய மரபுடைமைக் காட்சிக்கூடம், பொதுமக்கள் வருகைக்காக டிசம்பர் 2ஆம் தேதி முதல் திறந்துவைக்கப்படவுள்ளது.
நாட்டின் 60வது பிறந்தநாள் 2025ஆம் ஆண்டு அனுசரிக்கப்படும் நிலையில், ஃபூசாவ் காப்பி உணவகம், உணவுக்கூட வணிகச் சங்கம் இப்புதிய காட்சிக்கூடத்தை சிங்கப்பூருக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இந்த நிரந்தரக் காட்சிக்கூடத்தில் சுமார் 3,000 கலைப்பொருள்களும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
கிட்டத்தட்ட 4,900 சதுர அடியில் அமைந்துள்ள இந்தக் காட்சிக்கூடம், சுமார் $600,000 செலவில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அமைப்புகளும் பொதுமக்களும் காப்பிக் கடை தொடர்பான கலைப்பொருள்களைக் காட்சிக்கூடத்திற்கு வழங்குவதையும் சங்கம் வரவேற்கிறது.
காட்சிக்கூடத்தைத் தொடங்குவதற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டதற்கு, “சிங்கப்பூரின் காப்பிக் கடைகள் நாட்டுடன் சேர்ந்து வளர்ச்சியடைந்துள்ளன. சிங்கப்பூரர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளன,” என்றார் சங்கத்தின் தலைவர் திரு ஹோங் போ ஹின், 76.
ஃபூசாவ் காப்பி உணவகம், உணவுக்கூட வணிகச் சங்கம் 1921ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகவும் அதில் 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தற்போது இருப்பதாகவும் அறியப்படுகிறது. சிங்கப்பூரின் 400க்கும் மேற்பட்ட காப்பிக் கடைகள், சங்கத்திற்குச் சொந்தமானவை என்றும் கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் காலனித்துவ காலகட்டத்தில் சிங்கப்பூரின் காப்பிக் கடைகள் ஆரம்பிக்கப்பட்டன. மர வண்டிகளைக் கொண்டு உணவங்காடிக் கடைக்காரர்கள் இயங்கினர். பின்னர், வெயில், மழையிலிருந்து பாதுகாக்க வாடகைக்கு விடப்பட்ட இடங்களில் காப்பிக் கடைகள் அமைக்கப்பட்டன. ஹைனான், ஃபூசாவ் ஆகியவற்றைச் சேர்ந்த சீனக் குடியேறிகள் பெரும்பாலும் இந்தக் கடைகளை நடத்தி வந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இன்று சிங்கப்பூரில் சுமார் 1,100 காப்பிக் கடைகளும் உணவு நிலையங்களும் இருப்பதாகக் குறிப்பிட்ட திரு ஹோங், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வட்டாரங்களில் இருப்பவை 700க்கும் அதிகமானவை என்றார்.
காட்சிக்கூடம் 21 டெர்விட் ரோட்டில் உள்ள ஃபூசாவ் கட்டடத்தின் நான்காவது தளத்தில் உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வார நாள்களில் திறந்திருக்கும் இக்காட்சிக்கூடத்திற்கு அனுமதி இலவசம்.

