இந்துக் குடும்பங்கள் தங்கள் மறைந்த உறவினர்களுக்கு ஈமச்சடங்குகளைச் செய்வதற்கு ஏதுவாக சாங்கிக் கடற்கரையில் ஒரு பிரத்தியேகமான இடம் திறக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 13ஆம் நாள் அல்லது 16ஆம் நாள் கருமாதிச் சடங்குகளையும் பிரார்த்தனைகளையும் எளிமையாக மேற்கொள்வதற்காக புதிய கர்ம காரிய நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதை நிர்வகிக்கும் இந்து அறக்கட்டளை வாரியம் குறிப்பிட்டது.
சாங்கிக் கடற்கரை வாகன நிறுத்துமிடம் 2க்கு அருகில், 255 நிக்கல் டிரைவில் அமைந்துள்ள இந்த நிலையம், திங்கட்கிழமை (டிசம்பர் 29) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 20 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நான்கு தனி மண்டபங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு மண்டபத்திலும் 12 பேர்வரை அமர்ந்து சடங்குகளைச் செய்யும் வசதி உள்ளது.
இதற்குமுன் பல குடும்பங்கள் கரையோரத் திறந்தவெளிகளிலும் பொது மண்டபங்களிலும் வானிலைச் சவால்களுக்கு இடையே, விடிகாலைப் பொழுதில் சடங்குகளைச் செய்ய வேண்டியிருந்தது என்று வாரியத்தின் செயலாளரும் திட்டக் குழுவின் இணைத் தலைவருமான திரு சதிஷ் அப்பு கூறினார்.
இந்தப் புதிய நிலையம், மழை, காற்று போன்ற இயற்கை இடர்ப்பாடுகள், நெரிசல் போன்ற இடையூறுகளின்றி, அமைதியான தனிப்பட்ட சூழலில் அன்புக்குரியவர்களுக்கு இறுதி மரியாதையைச் செலுத்த வழிவகை செய்கிறது என்றார் அவர்.
புதிய கர்ம காரிய நிலையம் பற்றிய தகவல்கள் முதன்முதலில் 2020ல் அறிவிக்கப்பட்டது. வாரியத்தின் முழு நிதியுதவியுடன், ஏறக்குறைய $550,000 செலவில் ஒன்றரை ஆண்டு காலப் பணிகளுக்குப் பின் இந்நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.
கரையோரமாக நிலத்தைப் பெறுவதற்கும் அரசு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டதாக திரு சதிஷ் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் திட்டத்திற்காகத் தேசிய பூங்காக்கள் வாரியம், தேசிய சுற்றுப்புற வாரியம், சிங்கப்பூர் நில ஆணையம் ஆகியவற்றுடன் இந்து அறக்கட்டளை வாரியம் இணைந்து பணியாற்றியது.
கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு, ஸ்ரீ சிவன் கோயில், ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில், அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் ஆகியவற்றுடன் இணைந்து மூன்று மாத காலச் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பங்கேற்றன.
இந்துச் சமூகம் நீண்ட காலமாகவே இதுபோன்ற ஒருகூரையுடன் கூடிய வசதியை எதிர்பார்த்து வந்ததாக ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில் அர்ச்சகர் வீரப்பன் ரமேஷ் தெரிவித்தார்.
“புதிய வசதிகள் குறித்து குடும்பங்கள் என்னிடம் மகிழ்ச்சி தெரிவித்தன. குறிப்பாக மழைக்காலங்களில் இது மிகவும் உதவியாக இருப்பதுடன் இங்குள்ள தனிமுறை வசதியால் சடங்குகள் செய்பவர்களால் கடற்கரைக்கு வருபவர்களுக்கு எந்த இடையூறும் இருக்காது,” என்று அவர் மேலும் கூறினார்.
பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்த www.kkn.org.sg என்ற இணையத்தளத்தில் $50 கட்டணம் செலுத்தி இரண்டு மணி நேரத்திற்கு முன்பதிவு செய்துகொள்ளலாம்.
கட்டணத்தைப் பேநவ் (PayNow) வாயிலாகச் செலுத்தியவுடன், பயனர்களுக்கு மின்னஞ்சல் வழியாகவும் குறுஞ்செய்தி வழியாகவும் ஓர் இணையத்தள முகவரி (Access Link) அனுப்பப்படும். அதனை தங்கள் கைத்தொலைபேசியில் அழுத்தும்போது, நிலையத்தின் தானியங்கி நுழைவாயில் திறக்கும். அதன்வழியாக குடும்பத்தினர் நுழைய முடியும்.
நான்கு மண்டபங்களும் தடுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளதால், பெரிய குடும்பங்கள் தேவைப்பட்டால் இரண்டு மண்டபங்களைச் சேர்த்து முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.
சடங்குகளுக்குத் தேவையான மண்டபம், அமரும் வசதி, மின்விளக்குகள், பாத்திரங்கள், தட்டுகள், நீர் வசதி, கழிவு மேலாண்மை போன்ற அடிப்படைத் தேவைகளை நிலையம் வழங்குகிறது. இதனால் குடும்பத்தினர் பிரார்த்தனைக்குத் தேவையான பூசைப் பொருள்களை மட்டும் கொண்டுவந்தால் போதும்.
“இதுபோன்ற வசதிகள் அந்தக் கடினமான காலத்தில் குடும்பத்தினரின் மன அழுத்தத்தைக் குறைத்து, சடங்குகளில் முழுமையாகக் கவனம் செலுத்த உதவும் என்று நம்புகிறோம்,” என்று திரு சதீஷ் குறிப்பிட்டார்.
சக்கர நாற்காலி செல்ல ஏதுவாகவும் மூத்தோருக்கு உதவியாக இருக்கக்கூடிய வசதிகளும் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
சுயசேவை முறையில் செயல்படும் இந்த வசதியைப் பயன்படுத்தி முடித்தபிறகு பிரார்த்தனைக்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்களை மண்டபத்திலிருந்து அகற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தூய்மைப் பணிகளை மேற்பார்வையிட பணியாளர் ஒருவர் அங்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வாரியம் தெரிவித்தது.
கடலில் அஸ்தி கரைக்கும் சேவைகளை கர்ம காரிய நிலையம் வழங்குவதில்லை. அதற்கான ஏற்பாடுகளைக் குடும்பங்களே தனிப்பட்ட முறையில் செய்துகொள்ள வேண்டும். அதேபோல, ஈமச்சடங்கை முன்னின்று நடத்தும் அர்ச்சகருக்கும் குடும்பங்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.

