உடற்குறையுள்ளோருக்கு சேவைவழங்க புதிய நடுவம்

உடற்குறையுள்ளோருக்கு சேவைவழங்க புதிய நடுவம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Aug 2023 - 3:26 pm

2 mins read

தெம்பனிஸ் வெஸ்ட் சமூக மன்றத்தில் திறக்கப்பட்ட புதிய நடுவம் ஒன்றில் தெம்பனிஸ், பிடோக் பகுதிகளைச் சேர்ந்த உடற்குறையுள்ள குடியிருப்பாளர்களும் அவர்களின் பராமரிப்பாளர்களும் சமூக நடவடிக்கைகளில் கலந்துகொண்டு, புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளலாம்.

அத்தகைய நடுவம் சிங்கப்பூரில் முதன்முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. ‘இஎஸ்எச்@தெம்பனிஸ்’ என்றழைக்கப்படும் அது பராமரிப்பாளர்களுக்கு ஆதரவும் பயிற்சியும் வழங்குவதோடு, ஆதரவுக் கட்டமைப்புகளை வளர்க்கவும் உதவும். அது குறுகியகால பராமரிப்புச் சேவைகளையும் அளிக்கிறது.

உடற்குறையுள்ளோருக்கான எஸ்ஜி எனேபல் அமைப்பு, எஸ்பிடி அறநிதி ஆகியவற்றின் கூட்டு முயற்சியே, ‘இஎஸ்எச்’.

தெம்பனிசிலும் பிடோக்கிலும் வசிக்கும் 19க்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட உடற்குறையுள்ள சிங்கப்பூர் குடியிருப்பாளர்களுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் அது திறக்கப்பட்டது.

சமூக சேவைகள், வேலைவாய்ப்பு, மற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றை உடற்குறையுள்ளோருக்கு அருகிலேயே கொண்டுசேர்க்கும் நோக்கில் திறக்கப்படும் அத்தகைய நடுவங்கள், உடற்குறையுள்ளோருக்கான பெருந்திட்டம் 2030இன் ஒரு பகுதியாகும்.

உடற்குறையுள்ளோருக்கு மேலும் வலுவான ஆதரவுக் கட்டமைப்பை உருவாக்கவும் அந்த நடுவங்கள் நோக்கம் கொண்டுள்ளன.

விரைவுநடை, வைரக் கலைப் பட்டறைகள், மின்னிலக்கத் திறன்கள், பண நிர்வாகம் தொடர்பான வகுப்புகள் போன்ற சமூக நடவடிக்கைகள் ‘இஎஸ்எச்@தெம்பனிஸ்’ நடுவத்தில் வழங்கப்படும் திட்டங்களில் அடங்கும்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி திறப்பு நிகழ்வில் பேசினார். சமுதாயத்தில் முழுமையாகப் பங்குபெற்று சொந்த தனித்துவமான முறையில் பங்களிப்பதற்கு ஒவ்வொரு தனிமனிதருக்கும் வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்ற சிந்தனையை ‘இஎஸ்எச்’ பிரதிநிதிப்பதாகத் திரு மசகோஸ் கூறினார்.

சிங்கப்பூரர்கள் மேலும் வலுவான, மேலும் துடிப்பான சமூகத்தை உருவாக்க இது உதவும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
தெம்பனிஸ்சமூக சேவை