வரும் ஜூலை முதல், குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் (ஐசிஏ) புதிய சேவைகள் நிலையத்தில் உள்ள தானியக்கக் கூடங்களில் புதிய அடையாள அட்டைகளையும் கடப்பிதழ்களையும் மக்கள் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு முன்பதிவு தேவையில்லை.
லாவெண்டர் பகுதியில் எண் 2 கிரோஃபர்ட் ஸ்திரீட்டில் அமைந்துள்ள அப்புதிய நிலையம், தற்போதைய ஐசிஏ கட்டடத்துக்குப் பக்கத்தில் உள்ளது. ஏப்ரல் 7 முதல் செயல்பாடுகளைத் தொடங்கும் அந்நிலையம், திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறந்திருக்கும்.
2027 வரை அந்நிலையத்துக்கு வெளியே வாகன நிறுத்துமிட வசதி இருக்காது என்றாலும், அதன் நுழைவாயிலில் வாகனங்களிலிருந்து இறங்கலாம். பொதுப் போக்குவரத்து வழியாக அந்நிலையத்துக்குச் செல்லலாம்.
தற்போது, ஐசிஏ கட்டடத்தில் புதிய அடையாள அட்டைகளையும் கடப்பிதழ்களையும் பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்துகொள்ள வேண்டியுள்ளது. புதிய நிலையச் செயல்பாடுகள் குறித்த மேல்விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என ஆணையம் திங்கட்கிழமை (பிப்ரவரி 10) கூறியது.
ஒரே இடத்தில் மக்கள் தங்கள் வேலைகளை எளிதாக முடிக்க புதிய நிலையம் உதவும் என ஆணையம் சொன்னது. தற்போது, வெவ்வேறு சேவைகளுக்காக ஐசிஏ கட்டடத்தில் வெவ்வேறு தளங்களுக்கு அவர்கள் செல்ல வேண்டியுள்ளது.
ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 4 வரை தற்போதைய ஐசிஏ கட்டடத்தில், முன்பதிவு செய்யாதோருக்குச் சேவை வழங்கப்படாது. அப்போது புதிய நிலையத்தில் ஆணையம் அதன் செயல்முறைகளைச் சரிபார்க்க உள்ளதே இதற்குக் காரணம்.
அவசரத் தேவையுடையோருக்கு அவரவர் சூழ்நிலைகளை மதிப்பிட்டு சேவை வழங்கப்படும். அதற்கான ஆதாரங்களை மக்கள் வழங்க வேண்டும் என்றது ஆணையம்.