புதிய ஐசிஏ சேவை நிலையம் ஏப்ரல் 7 முதல் செயல்படும்

2 mins read
தற்போதைய கட்டடம் ஏப்ரல் 1 முதல் மூடப்படும்
68aaf384-e1f4-467a-9bfa-395c5a1a7827
புதிய நிலையம் தற்போது செயல்பட்டு வரும் கட்டடத்துக்கு எதிரே எண் 2 கிராஃபர்ட் ஸ்திரீட்டில் அமைந்துள்ளது.  - படம்: சாவ்பாவ்

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் சேவையை நாட விரும்பும் பொதுமக்கள் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் லாவண்டர் பகுதியில் உள்ள அதன் புதிய சேவை நிலையத்திற்குச் செல்ல வேண்டும்.

புதிய நிலையம் தற்போது செயல்பட்டு வரும் கட்டடத்துக்கு எதிரே எண் 2 கிராஃபர்ட் ஸ்திரீட்டில் அமைந்துள்ளது. இது திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள ஐசிஏ கட்டடம் ஏப்ரல் 1 முதல் நிரந்தரமாக மூடப்படும் என்று ஆணையம் மார்ச் 17ஆம் தேதி தெரிவித்தது.

அவசரத் தேவை காரணமாக ஆணையத்தின் சேவையை நாட விரும்புவோரின் சூழலை ஆணையம் ஆராய்வதுடன் அந்த நபர்கள் தேவையான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அவசரத் தேவைக்காக பயணம் மேற்கொள்ளுதல், ஏப்ரல் 1ஆம் தேதிக்கும் ஏப்ரல் 6ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில் 22 வயது பூர்த்தியாகவுள்ளோர் சத்திய பிரமாணம் எடுத்தல், அதே காலகட்டத்தில் காலாவதியாகும் குடிநுழைவு அனுமதிச்சீட்டுக்கான விண்ணப்பங்களை விதிமுறைப்படி நிறைவுசெய்தல் போன்ற கோரிக்கைகள் இதன்கீழ் அடங்கும்.

இந்நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதிக்கும் ஏப்ரல் 6ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்கள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே ஐசிஏ தொடர்பான பரிவர்த்தனைகளை முடித்துக்கொள்ளுமாறு பொதுமக்களை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையே, பொதுமக்கள் தொடர்ந்து தங்கள் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையத்தளம் அல்லது ‘MyICA’ கைப்பேசிச் செயலிவழி சமர்ப்பிக்க முடியும்.

புதிய நிலையத்திற்கு ஏப்ரல் 7ஆம் தேதி முதல் வருகை புரிய விரும்புவோர் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. வாகனங்களை நிறுத்தும் இடம் 2027ஆம் ஆண்டிலிருந்துதான் செயல்படத் தொடங்கும் நிலையில், நிலையத்தின் வாசலில் வாகனத்திலிருந்து இறங்கும் வசதி வழங்கப்படும்.

ஐசிஏ கட்டடத்தின் வெவ்வேறு மாடிகளுக்கு வெவ்வேறு காரணத்துக்காகச் செல்லும் நிலை இனி புதிய சேவைகள் நிலையம் செயல்படத் தொடங்கிய பின்பு இருக்காது என்று ஆணையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்