சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் (எஸ்ஐஏ) ‘சுவீட்’, முதல் வகுப்பு, பிஸ்னஸ் வகுப்பு (Suites, First Class, and Business Class) பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இப்புதிய உணவு வகைகள் மே 1ஆம் தேதிமுதல் சேவையில் கொண்டுவரப்படும்.
‘சுவீட்’, முதல் வகுப்புப் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவான ஆறுவகை ‘ஷாஹி தாலி’ உணவு, எட்டு வகை உணவாக மேம்படுத்தப்படுகிறது. சோறு, ‘பராத்தா’வுடன் ஆறு காய்கறிகள் அல்லது இறைச்சி வழங்கப்படும். அத்துடன், சூடான அல்லது குளிர்ந்த பானமும் வழங்கப்படும். ‘லஸ்ஸி’ எனும் இந்திய இனிப்பு பானமும் வழங்கப்படும்.
இந்த அனுபவத்தை இன்னும் மேம்படுத்த செம்பு நிறத் தட்டுகளில் அவை வழங்கப்படும்.
‘பிஸ்னஸ்’ வகுப்புப் பயணிகளுக்கு வழங்கப்படும் ‘ருச்சி தாலி’ நான்கு வகை உணவிலிருந்து ஆறு வகை உணவுடன் மேம்பாடு காணவுள்ளது. சோறு, ‘பராத்தா’, நான்கு காய்கறிகள் அல்லது இறைச்சியை அது உள்ளடக்கி இருக்கும். அத்துடன், ஒரு தின்பண்டம் (Starter), ‘லஸ்ஸி’ பானம், பழக்கூட்டு (சாலட்) வழங்கப்படும். இவை வெள்ளிநிறத் தட்டுகளில் வழங்கப்படும் எனச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்தது.
புகழ்பெற்ற இந்தியச் சமையற்கலைஞரான சஞ்சீவ் கபூரின் மேற்பார்வையில் வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வுணவு வகைகள், இந்தியப் பாரம்பரிய முறைகளான மண் ‘தந்தூர்’ அடுப்பு, இரும்புப் பாத்திரங்களில் சமைக்கப்படும். காய்கறிகள், மஞ்சள், இஞ்சி ஆகியவற்றை உள்ளடக்கி, புரதம், மாவுச்சத்து போன்ற ஊட்டச்சத்துமிக்க உணவாக அமையும் என்றும் எஸ்ஐஏ தெரிவித்தது.
அவை இந்தியாவில் பல பகுதிகளின் உணவு முறைகளின் கலவையான அனுபவமாக இருக்கும் என்றும் எஸ்ஐஏ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

