உலகத் தரம்வாய்ந்த நிகழ்ச்சிகளை ஈர்க்க புதிய உள்ளரங்கு வளாகமும், மேலும் அத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்றுநடத்த புதிய $165 மில்லியன் பெறுமானமுள்ள நிதியும் இங்கு துடிப்புமிக்க விளையாட்டுக் கலாசாரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் உள்ளடங்கும்.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் தமது அமைச்சின் வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தின்போது அதை தெரிவித்தார்.
அந்தத் திட்டங்கள் பலதரப்பட்ட கனவுகள் செழித்தோங்கக்கூடிய துடிப்பான, ஒன்றிணைந்த இல்லத்தை உருவாக்க நோக்கம் கொண்டுள்ளதாகத் திரு டோங் கூறினார்.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சும் ‘ஸ்போர்ட்எஸ்ஜி’உம் உடற்குறை உள்ளோருக்கான விளையாட்டுப் பெருந்திட்டம் குறித்து தகவல் தெரிவிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. அந்தப் பரிந்துரைகள் இவ்வாண்டு பிற்பாதியில் அறிவிக்கப்படும்.
2026ஆம் ஆண்டுக்குள் அனைத்து ‘ஆக்டிவ்எஸ்ஜி’ உடற்பயிற்சிக் கூடங்களையும் அனைவரையும் உள்ளடக்கியவையாக வைத்திருக்க ‘ஸ்போர்ட்எஸ்ஜி’ முனைகிறது.
இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட “நமது எஸ்ஜி கலை திட்டத்திற்கு’ ஆதரவு வழங்க அரசாங்கம் அடுத்த நான்கு ஆண்டுகளில் கூடுதலாக $100 மில்லியன் முதலீடு செய்யும்.
கலைத் துறை ஊழியரணியில் மூன்றில் ஒரு பங்கினர் அல்லது ஏறக்குறைய 7,000 பேர் சுய தொழில் செய்பவர்கள். அவர்களின் விருப்பங்களைப் பூர்த்திசெய்யவும், சிங்கப்பூரின் கலைத் துறை ஊழியரணியை வலுப்படுத்தவும், தேசிய கலை மன்றம் அவர்களுக்கான பயிற்சித் திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும்.
இதற்கிடையே அக்கம்பக்கங்களில் மரபுடைமைத் திட்டங்களை அறிமுகப்படுத்தவும், இடங்களை மேம்படுத்தவும் தேசிய முரபுடைமை வாரியம் சமூகப் பங்காளிகளுடன் அணுக்கமாகப் பணியாற்றும். உதாரணத்திற்கு இவ்வாண்டு ஏப்ரலில் காத்தோங்-ஜூ சியட் பகுதியில் முதல் மரபுடைமை நடுவம் தொடங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
பொதுமக்கள் அந்தப் பகுதியில் உள்ள வெவ்வேறு இடங்களில் 25க்கும் மேற்பட்ட திட்டங்களை எதிர்பார்க்கலாம்.


