சிங்கப்பூர் மின்னிலக்க கட்டமைப்பில் தனிநபர்களின் அடையாள அட்டை (NRIC) எண் கொண்டு பயனீட்டாளர்கள் குறித்த தகவலை அறிய முடியும்.
தனிநபர்களின் அடையாள அட்டை எண் மின்னிலக்க கட்டமைப்பில் இல்லாமல் இருந்தால் அது மக்களுக்கு மேலும் பாதுகாப்பை தரும் என்று மின்னிலக்க கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால் தனிநபர்களின் அடையாள அட்டை எண்ணிற்கு பதில் வேறு செயல்முறைகளை உடனடியாக கொண்டு வருவது சவாலான ஒன்று. அதை தயாரிக்க ஓராண்டு வரை காலம் பிடிக்கும் என்று இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அடையாள அட்டை எண்கள் கொண்ட கட்டமைப்பு ஊடுவப்பட்டால் சிங்கப்பூரர்கள் மோசடி, அடையாளத் திருட்டு உள்ளிட்டவையால் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர்கள் நினைவூட்டினர்.
அண்மையில் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (Acra) தளத்தில் தனி நபர்களின் அடையாள அட்டை எண்களைப் பெற முடிவது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அடையாள அட்டை எண் கொண்ட கட்டமைப்புகளை பாதுகாக்க கடவுச்சொல், கைரேகை கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைப்புகள் செய்ய வேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்தினர்.
வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், சுகாதார அமைப்புகள் பல, அடையாள அட்டை எண் கொண்டுதான் தங்களது பயனீட்டாளர் தரவுகளை எளிதல் காண்கின்றனர். அந்தக் கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்றால் பல மாதங்கள் அல்லது ஓராண்டுக்கு மேல் ஆகும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.