நியாயமான வேலைவாய்ப்பு நடைமுறைகளையும், வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களின் மேம்பட்ட நல்வாழ்வையும் ஊக்குவிப்பதற்கான ஒரு புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘மெய்ட் ஆஃப் ஹானர்’ எனப்படும் இந்த முயற்சி வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு (தேவைப்பட்டால் ஈடுசெய்யக்கூடியது), மாதம் ஒரு கட்டாய ஓய்வு நாள் (ஈடுசெய்ய முடியாது) ஆகிய உரிமைகளை வலியுறுத்தும் மனிதவள அமைச்சின் தேசிய முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கிறது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வீ கிம் வீ தொடர்பு, தகவல் பள்ளியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.
சிங்கப்பூரில் தற்போது வெளிநாடுகளைச் சேர்ந்த இல்லப் பணிப்பெண்களை பணியமர்த்தியுள்ள முதலாளிகள் 105 பேரிடம் இக்குழு ஆய்வு நடத்தியது. அவர்களில் மூவரில் ஒருவர் தங்கள் பணியாளர்களுக்கு மாதாந்தரக் கட்டாய ஓய்வுநாளை வழங்கத் தவறியது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் நாளொன்றுக்கு ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்வதாகவும் ஆய்வு கண்டறிந்துள்ளது.
இருப்பினும், பெரும்பாலான முதலாளிகள் தங்கள் வீட்டுப் பணிப்பெண்களின் நல்வாழ்வு முக்கியம் என்பதை ஒப்புக்கொண்டனர்.
பதிலளித்தவர்களில் 81.9 விழுக்காட்டினர் வாராந்தர ஓய்வுநாள்கள் பணியாளர்களின் மன, உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை என்று ஏற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கு உறங்குவதற்கும் அவர்களுக்கான தனிப்பட்ட நேரத்திற்கும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று 76 விழுக்காட்டினர் ஒப்புக்கொள்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இது முதலாளிகளின் மனப்பாங்கு பெரும்பாலும் நேர்மறையாக இருப்பதைச் சுட்டிக்காட்டினாலும், மனிதவள அமைச்சின் வழிகாட்டுதல்களின்படி பார்க்கையில் இக்கருத்துகள் நடைமுறையில் சீராகப் பிரதிபலிக்கவில்லை.
“சிங்கப்பூரில், முதலாளிகளின் இருப்பிடத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 300,000. இவர்கள் நம் வீடுகளில் இன்றியமையாத பராமரிப்பு, வீட்டு வேலைகளைச் செய்து வருகின்றனர். சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படைந்து வருவதால் வெளிநாட்டுப் பணிப்பெண்களைச் சார்ந்திருக்கும் நிலை இனி அதிகரிக்கவே செய்யும். எனவே அவர்கள் நியாயமாகவும் கண்ணியத்துடனும் நடத்தப்படுவதும் பிற ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதே அடிப்படை உரிமைகளும் பாதுகாப்பும் இவர்களுக்கும் வழங்கப்படுவதும் மிக அவசியம்,” என்றார் குடியேற்றப் பொருளியலுக்கான மனிதநேய அமைப்பின் (Humanitarian Organization for Migration Economics -HOME) நிர்வாக இயக்குநர் ஸ்டெஃபனி சோக்.
அந்த அமைப்புடன் இணைந்து ‘மெய்ட் ஆஃப் ஹானர்’, பொதுக் கண்காட்சி ஒன்றை ஜூரோங் வட்டார நூலகத்தில் தொடங்கியுள்ளது.
சனிக்கிழமை (ஜனவரி 31) நடைபெற்ற நிகழ்ச்சியில், வெஸ்ட் கோஸ்ட்- ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கண்காட்சியைத் தொடங்கிவைத்தார்.
“வெளிநாட்டுப் பணிப்பெண்கள் மீது நாம் அக்கறை கொள்ளாமல் வேறு யார் அக்கறை கொள்வார்? இத்தகைய கேள்விகளுக்கான பதில்களை யோசிக்க இந்தக் கண்காட்சி தூண்டுகிறது. இதுபோன்ற கண்காட்சிகள் நாம் அக்கறை கொள்ளாத சில விவகாரங்கள் மீது அக்கறை கொள்ள ஊக்குவிக்கிறது,” என்று தமது உரையில் குறிப்பிட்டார் டாக்டர் ஹமீது.
வெளிநாட்டுப் பணிப்பெண்கள், வெளிநாட்டு ஊழியர்கள் சந்திக்கும் இதர பிரச்சினைகள் மீதும் கவனம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், வெறும் கொள்கைகள் மூலம் மட்டும் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்றார்.
வெளிநாட்டுப் பணிப்பெண்கள், முதலாளிகளின் தனிப்பட்ட கதைகள், அத்துடன் நியாயமான வேலைவாய்ப்பு நடைமுறைகள் குறித்த கல்வித் தகவல்களைக் கொண்டுள்ள இந்தக் கண்காட்சி இல்லப் பணியாளர்களின் சவால்கள், பங்களிப்புகள் பற்றிய ஆழமான புரிதலையும் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.
ஓய்வுநாள்களை வழங்குதல், தனியுரிமையை மதித்தல், நியாயமான வேலைப்பளுவைப் பேணுதல் போன்ற நியாயமான வேலைவாய்ப்பை உறுதிசெய்ய முதலாளிகள் பின்பற்றக்கூடிய நடைமுறை வழிகளையும் பார்வையாளர்கள் அறிந்துகொள்ளலாம்.
இந்தக் கண்காட்சி பிப்ரவரி 28ஆம் தேதிவரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

