நிதித் துறையில் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்ப முகவர்களுக்குப் பாதுகாப்பு நெறிமுறைகளை உருவாக்க வெள்ளை அறிக்கையொன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 3) வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நாணய ஆணையம், நிதி நிலையங்களோடும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களோடும் இணைந்து அதனை உருவாக்கியுள்ளது.
நிதிச் சேவைத் துறையில் உள்ள ஏஐ முகவர்கள் பணிகளைப் பாதுகாப்புடனும் நம்பகத்தன்மையுடனும் ஆபத்தின்றியும் மேற்கொள்ளப் புதிய நெறிமுறைக் கட்டமைப்பை அறிக்கை பரிந்துரைக்கிறது.
இந்தக் கட்டமைப்பு, ‘சேஃப்கார்ட்ஸ் ஃபார் ஏஜென்ட்டிக் ஃபினான்ஸ் அட் ரன்டைம்’ என்று வழங்கப்படுகிறது.
ஏஐ முகவர் ஒன்று, பணிகளைச் செய்வதற்கு முன்பு, அது மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகளைச் சரிபார்த்துப் பதிவுசெய்யும் நிர்வாகக் கட்டுப்பாட்டு அம்சங்களைக் கட்டமைப்பு வழங்குகிறது.
நிதிச் சேவைத் துறையில் ஏஐ முகவர்கள் தாங்களாகவே பணிகளை மேற்கொள்வது அதிகரித்துவரும் சூழலில் அண்மை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணிகளைச் செயல்படுத்தச் சில வரம்புகள், கொள்கைகள், இடர் எல்லைகளை நிதி நிறுவனங்கள் நிர்ணயிப்பது வழக்கம். ஏஐ முகவர்களின் செயல்பாடுகள் அவற்றுக்கு ஏற்றபடி இருப்பதை உறுதி செய்ய வணிகங்களுக்கு ‘நிகழ்நேரப் பாதுகாப்பு வழிமுறைகள்’ தேவைப்படுகின்றன.
பல்வேறு நிதித் துறைகளில், புதிய கட்டமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த தொழில்துறை ஆய்வுகள் வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஏன்ட் ஃபைனான்ஷியல், ஓசிபிசி, விசா, மாஸ்டர்கார்ட் போன்ற நிறுவனங்கள் இதில் பங்கெடுத்துள்ளன. நிறுவன வங்கியியல், சொத்து நிர்வாகம், காப்புறுதி போன்ற பல்வேறு துறைகள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர் தொடர்பு, முகவர் உதவியுடனான கட்டணம் செலுத்துதல், கருவூலச் செயல்பாடுகள் முதலியவற்றில் தொழில்துறை உறுப்பினர்கள் கட்டமைப்பைப் பயன்படுத்தியுள்ளனர்.
ஆணையத்தின் ‘பில்டிஃபின்.ஏஐ இனிஷியேட்டிவ்’ எனும் திட்டத்தின்கீழ் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நிதித் துறையில் ஏஐ தீர்வுகள் பொறுப்பான முறையில் உருவாக்கப்படுவதற்கும் பயன்படுத்தப்படுவதற்கும் அது ஆதரவளிப்பதாக மத்திய வங்கி குறிப்பிட்டது.
பில்ட்ஃபின்.ஏஐ பணிக்குழுவில் இணைந்து பங்களிக்க முன்வருமாறு ஆர்வமுள்ள தொழில்துறைப் பங்காளித்துவ நிறுவனங்களுக்கு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

