சமூக சேவைத் துறையில் பணியாற்றுவோர் தங்கள் பணி குறித்துப் பிறரிடம் விவரிப்பதில் சில சவால்களை எதிர்நோக்குகின்றனர்.
இதற்குத் தீர்வுகாணும் வகையில், அதிகம் அறியப்படாத பணிகளில் உள்ள சமூக சேவைத் துறை தொழில்முறைப் பணியாளர்கள் இணைந்து தங்கள் வேலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இருவழித் தொடர்புக் காணொளிகளைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.
பேச்சுப் பயிற்சி அளிப்போர், கற்றலை மேம்படுத்த உதவும் கல்வி உளவியலாளர்கள் போன்றோரும் அவர்களில் அடங்குவர்.
இக்குழுவினர், புதன்கிழமை (ஜூலை 9 தேசிய நூலகத்தில் நடைபெற்ற ‘டிரைப்’ தூதர் திட்ட (Tribe Ambassadors Programme) நேரடி அனுபவ நிகழ்ச்சியில் தங்கள் யோசனைகளை முன்வைத்தனர்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் சமூக சேவைக்கான தேசிய மன்றமும் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்தப் புதிய திட்டம், சமூக சேவைத் துறை சார்ந்த தொழில்முறைப் பணியாளர்கள் உள்ளடக்கங்களை உருவாக்கப் பயிற்சி அளிக்கிறது.
‘டிரைப்’ தூதர் திட்டத்தின்கீழ் முதன்முறையாக 31 சமூக சேவை அமைப்புகளைச் சேர்ந்த தொழில்முறைப் பணியாளர்கள் 36 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.
தங்கள் பணி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும், கூடுதலானோரை இத்துறையில் சேர ஊக்குவிக்கும் உள்ளடக்கங்களை அவர்கள் உருவாக்கினர்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, சமூக சேவைக்கான தேசிய மன்றம் ஆகியவற்றின் ஆதரவுடன் தங்கள் யோசனைகளை நடப்புக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளில் இந்த ஆண்டு முழுவதும் அவர்கள் ஈடுபடுவர்.
தொடர்புடைய செய்திகள்
எடுத்துக்காட்டாக, டிக்டாக், இன்ஸ்டகிராம் தளங்களில் வெளியாகும் ‘என் வேலையை ஊகியுங்கள்’ எனும் காணொளியில் சமூக சேவைத் துறைத் தொழில்முறைப் பணியாளர்கள் தங்கள் வேலை குறித்த சில குறிப்புகளைத் தருவர்.
பின்னர் அதை ஊகிக்கும்படி கேட்டுக்கொள்வர். இறுதியில் தங்கள் வேலை தொடர்பான விடையை வெளியிடுவதுடன் பார்வையாளர்கள் அந்தப் பணி குறித்து மேலும் தெரிந்துகொள்ளவும் தங்கள் துறையில் வேலை வாய்ப்புகளை ஆராயவும் ஊக்குவிப்பர்.
நிகழ்ச்சியில் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, ‘டிரைப்’ தூதர்கள் சமூக சேவைத் துறையின் தாக்கத்தை விரிவுபடுத்துவதாகக் கூறினார்.
வேலையில் அக்கறையுடன் செயல்படுவதற்கு அப்பால் நம்பகத்தன்மை, கருணை ஆகியவற்றின் குரலாகவும் அவர்கள் விளங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் ஏழு குழுவினர் தங்கள் யோசனைகளை முன்வைத்தனர். தங்கள் காணொளிகள் தங்களது பணி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் உதவி அல்லது ஆதரவு தேவைப்படுவோர் தங்களை அணுகலாம் என்பதைத் தெரிந்துகொள்ளவும் உதவும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

