இளையர்களின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் புதிய முயற்சி

இளையர்களின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் புதிய முயற்சி

1 of 2
படம்: எஸ்பிஎச் மீடியா
படம்: எஸ்பிஎச் மீடியா

09 Oct 2026 - 5:18 am

2 mins read

தன்னலமின்றி சமூகத்துக்குப் பங்களிக்கும் இளவயதினரை அங்கீகரிக்க அதிபர் தொண்டூழிய, அறக்கொடை விருதுகளில் (President’s Volunteerism & Philanthropy Awards) ஒரு புதிய இளையர் பிரிவு புதன்கிழமை (அக்டோபர் 7) அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தப் புதிய பிரிவு, 17 முதல் 25 வயதுக்குட்பட்ட இளையர்களை அங்கீகரிக்கும். விருதுகளின் தற்போதைய ‘நல்ல மனிதர்கள்’ (People of Good) என்ற ஒரு பிரிவின் விரிவாக்கமாகவும் அமைந்துள்ளது.

ராஃபிள்ஸ் ஹோட்டல் வளாகத்தில் 14வது முறையாக நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மொத்தம் 17 வெற்றியாளர்களுக்கு அவர் விருது வழங்கிச் சிறப்பித்தார்

நல்ல மனிதர்கள், நல்ல தலைவர்கள், நல்ல அமைப்புகள், நல்ல சமூகங்கள், மதிப்புமிக்க நல்ல நகரம் ஆகிய ஐந்து பிரிவுகளின்கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்வாண்டின் விருதுகளுக்கு 455 பரிந்துரைகள் வந்ததாக தேசியத் தொண்டூழிய, அறக்கொடை மையத்தின் தலைமைச் செயல் அதிகாரி டோனி சோ தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சரும் கல்விக்கான இரண்டாம் அமைச்சருமான டேவிட் நியோவும் கலந்துகொண்டார்.

வெற்றியாளர்களின் கதைகள், ‘நாம் முதலில்’ என்ற சமுதாயக் கொள்கையை வெளிப்படுத்துகின்றன.

மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் மேலும் முழுமையாகப் பங்கேற்கவும் கூடுதல் சுதந்திரத்துடன் வாழவும் உதவிய சிலரில் 38 வயது யிவெட் தேவி சந்திராவும் ஒருவர்.

நல்ல தலைவர்கள் என்ற பிரிவில் விருது பெற்ற அவர், சிங்கப்பூர் உடற்குறையுள்ளோருக்கான மிதிவண்டியோட்டக் கூட்டமைப்பில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் தொண்டூழியராக இருந்து, தற்போது அதன் தலைவராகச் சேவையாற்றி வருகிறார்.

ஒருமுறை மாற்றுத்திறனாளிகள் மிதிவண்டிப் பயிற்சி செய்வதைக் கண்ட அவர் அவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்று யோசித்தார். அப்போதிருந்து, பங்களிக்க வேண்டும் என்ற விருப்பம் அவருள் எழுந்தது.

ஒரு சமூகமாக நம்மால் எந்த அளவுக்கு மாற்றுத்திறனாளிகளுக்குத் தொடர்ந்து சிறந்த ஆதரவை வழங்க முடியும் என்பதை ஆராய யிவெட் விரும்புகிறார்.

“மாற்றுத்திறனாளிகள் இந்தச் சமூகத்தின் ஓர் அங்கம் என்று உணர விளையாட்டுகள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்