தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தனது ‘எஸ்ஜி விமன் இன் டெக்’ முயற்சியின் ஐந்தாவது ஆண்டு நிறைவை நினைவூட்டுவதற்காக ‘ரீலாஞ்ச்’ (Relaunch) என்ற புதிய மறுதொடக்கத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
என்டியுசி கற்றல் நடுவம் (NTUC Learning Hub) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்திட்டம், நீண்ட இடைவெளிக்குப் பின் தொழில்நுட்பத் துறைக்குத் திரும்பும் பெண்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிங்கப்பூர் மரியட் டாங் பிளாசா ஹோட்டலில் திங்கட்கிழமை (நவம்பர் 18) நடைபெற்ற ஆண்டு விழாவில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சரும் ‘எஸ்ஜி விமன் இன் டெக்’ முயற்சியின் புரவலருமான ஜோசஃபின் டியோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“பெண்களை ஆதரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுவரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் விகிதம் 2020ல் 31 விழுக்காட்டிலிருந்து 2023ல் 56 விழுக்காடாக உயர்ந்தது,” என்று அவர் கூறினார்.
‘எஸ்ஜி விமன் இன் டெக்’ போன்றவை இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக உள்ளன என்றும் இத்திட்டத்தால் 120,000க்கும் அதிகமானோரின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் திருவாட்டி டியோ சொன்னார்.
மேலும், தொழில்நுட்பத் துறையில் பணிபுரிய இளம் பெண்களை ஊக்குவிப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இதுவரை 23 நிறுவனங்களின் ஆதரவைப் பெற்றுள்ள மறுதொடக்கத் திட்டம், இடைவெளிக்குப் பின்பு தொழில்நுட்பத் துறைக்குத் திரும்பும் பெண்களுக்கு விரிவான கட்டமைப்பை வழங்குகிறது.
இத்திட்டம் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துதல், வாழ்க்கைத்தொழில் பயிற்சி, வழிகாட்டுதல், வேலை வாரியம் (Jobs Board) ஆகிய நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கலை மீது தாம் கொண்டிருந்த ஆர்வத்தால் 2011ல் தமது வேலையிலிருந்து விலகி, லாசால் கலைக் கல்லூரியில் சேர்ந்தார் மறுதொடக்கத் திட்டத்தில் பங்குபெறும் அமைப்புகளில் ஒன்றான வீலுக்அப்.ஏஐயின் (vLookUp.Ai) நிறுவனர் திருவாட்டி காஞ்சனா குப்தா, 50. படித்துக்கொண்டிருந்த நான்காண்டு காலகட்டத்தில் தாம் குழந்தைகளையும் ஈன்றெடுத்ததாக அவர் சொன்னார்.
பின்னர் வேலைக்குத் திரும்பிய திருவாட்டி காஞ்சனாவுக்கு 2020ல் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அதிலிருந்து மீளும் வகையில் தமது உடல்நலத்தில் கவனம் செலுத்துவதற்கு வேலையிலிருந்து மீண்டும் 10 மாத இடைவெளி எடுத்ததாகக் கூறினார்.
“இத்தனைச் சவால்கள் இருந்தபோதும், நான் 2021ல் வேலைக்கு மேலும் உறுதியுடன் திரும்பினேன். அச்சமயம் எனக்கு உதவிய வாழ்க்கைத்தொழில் வழிகாட்டிகளின் ஆலோசனைகளுக்கும் ஆதரவிற்கும் நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்,” என்றார் அவர்.
தம் சொந்த அனுபவங்களிலிருந்து உத்வேகம் பெற்ற திருவாட்டி காஞ்சனா, உலகெங்கிலுமுள்ள பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த பெண்களுடன் தங்களுக்குப் பொருத்தமான வழிகாட்டிகளை இணைத்துத் தருவதை நோக்கமாகக் கொண்ட ‘வீலுக்அப்.ஏஐ’ தொழில்நுட்பத் தளத்தை உருவாக்கினார்.
“அவர்களின் பின்னணி எதுவாயினும், அவர்கள் வாழ்க்கையின் எந்தக் கட்டத்தில் இருந்தாலும் தடைகளைக் கடந்து பெண்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறேன்,” என்றார் அவர்.
பணியிடத்திற்குத் திரும்பும் பெண்கள் தங்கள் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்த, தங்களின் தொழில் தொடர்புகளுடன் மீண்டும் இணைந்து, வழிகாட்டிகளின் உதவிகளை நாடி, தங்கள் தொழிலுக்குத் தொடர்புடைய படிப்புகளை மேற்கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்தினார்.
“உங்கள் மீதுள்ள நம்பிக்கையை என்றும் இழக்காதீர். தொழில்துறைக்குத் திரும்புவது சற்று காலம் எடுத்தாலும், அதை நோக்கி தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்,” என்று திருவாட்டி காஞ்சனா கூறினார்.

