ஒவ்வாமையால் ஏற்படும் மூக்கு அழற்சி பிரச்சினையைச் சமாளிக்க இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
படுக்கை விரிப்பு, படுக்கை மெத்தைகளில் உள்ள நுண்ணுயிர்களால் காலையில் எழுந்தவுடன் மூக்கடைப்பு, மூக்குச் சளி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இங் டெங் ஃபோங் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை நிபுணரான துணை பேராசிரியர் இங் சிவ் லிப் கூறினார்.
பருவகாலங்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வாமையும் வேறுபடுகிறது.
இத்தகைய ஒவ்வாமைகளை நீண்டகாலம் சிறந்த வகையில் சமாளிக்க இங் டெங் ஃபோங் மருத்துவமனை புதிய ஆய்வை மேற்கொண்டு வருகிறது.
2024ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட புரோஜெக்ட் என்டென்னா (EnTenna) என்ற திட்டத்தின் மூலம் 2026ஆண்டுக்குள் 6,000 நோயாளிகளிடம் ஆய்வு நடத்தப்படும். ஒவ்வாமைப் பற்றிய தரவுகளைச் சேகரிப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவியுடன் தரவுகளைப் பகுப்பாய்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட சிகிக்சை வழங்குவது, முறையாக மருந்துகளை எடுத்துக் கொள்வது, இதன் மூலம் நோயாளிகள் அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து செல்வதைத் தவிர்ப்பது உள்ளிட்டவை ஆய்வின் முக்கிய இலக்குகளாகும்.
இந்தப் புதிய முயற்சிக்கு தேசிய பல்கலைக் கழக மருத்துவமனை, டான் டோக் செங் மருத்துவமனை, சாங்கி பொது மருத்துவமனை, ஏ*ஸ்டார் ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சுகாதார அமைச்சின் சுகாதார புத்தாக்க நிதி, இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையின் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனமான ஜூரோங்ஹெல்த் நிதி, ஜூரோங் சமூக மருத்துவமனை ஆகியவை ஆய்வுக்கு நிதியுதவி அளித்துள்ளன.
சிங்கப்பூர் மக்கள் தொகையில் 39 விழுக்காட்டினர் ஒவ்வாமை மூக்கு அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று என்டென்னா திட்டத்தின் மூத்த ஆலோசகரும் முதன்மை ஆய்வாளருமான பேராசிரியர் இங் குறிப்பிட்டார். இந்தப் பிரச்சினை ஆசிய மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது நன்கு ஆவணப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.