செயற்கை நுண்ணறிவில் கவனம் செலுத்தும் புது முயற்சிகள் சிங்கப்பூருக்குத் தேவையானவை: விக்ரம் நாயர், ஹமீது ரசாக்

செயற்கை நுண்ணறிவில் கவனம் செலுத்தும் புது முயற்சிகள் சிங்கப்பூருக்குத் தேவையானவை: விக்ரம் நாயர், ஹமீது ரசாக்

2 mins read
be5391fb-623c-4655-8a12-c3debd88f1f3
இப்போது தனிப்பட்ட, தொழில்முறை அளவில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுக்கு அறிமுகம் கண்டுள்ள புதிய முயற்சிகள் மிகச் சரியானவை என்று செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் கூறினார். - படம்: தமிழ் முரசு

சிங்கப்பூர் சிறிது காலமாகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த வரவுசெலவுத் திட்டத்தில் தனிப்பட்ட, தொழில்முறை அளவில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுக்கு அறிமுகம் கண்டுள்ள புதிய முயற்சிகள் மிகச் சரியானவை என்று செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 12) பிரதமர் லாரன்ஸ் வோங் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து திரு விக்ரம் தமிழ் முரசிடம் பேசினார்.

“செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டால் பதிப்புரிமை, வன்போலிகள் போன்ற சவால்களை எதிர்கொள்ள நேரிடும். அவை குறித்து கவனமாக இருக்கவேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த விரும்பும் வணிகங்கள் ஆதரவு பெறுவதையும் திரு விக்ரம் பாராட்டினார்.

மேலும், இந்த ஆண்டு நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் உலகளாவிய பாதுகாப்பு என்று அவர் கூறினார்.

“பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளச் சிங்கப்பூர் தனித்து நிற்கத் தயாராக இருக்க வேண்டும்,” என்றும் வலியுறுத்தினார்.

சிங்கப்பூர் ஊழியரணி, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் ஒரே அமைப்பாக இணையும் முயற்சியை வரவேற்பதாகக் கூறினார் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக்.
சிங்கப்பூர் ஊழியரணி, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் ஒரே அமைப்பாக இணையும் முயற்சியை வரவேற்பதாகக் கூறினார் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஊழியரணி, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் இரண்டும் ஒரே அமைப்பாக இணையும் முயற்சியை வரவேற்பதாகக் கூறினார் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக்.

“ஊழியர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கும் அதிகத் திறன்களைப் பெறுவதற்குமான நீக்குப்போக்குத்தன்மை கூடியுள்ளது,” என்றார் அவர்.

அத்துடன், ஊழியர்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை மேம்படுத்திக்கொள்ள ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ திட்டத்தின் விரிவாக்கம் வழிவகுக்கும் என்றும் டாக்டர் ஹமீது கூறினார்.

“ஒவ்வொரு துறையிலும் ஊழியர்களுக்குத் தற்போது கூடுதல் கற்றல் வாய்ப்புகள் இருப்பது வரவேற்கத்தக்கது,” என்றார் அவர்.

செயற்கை நுண்ணறிவு என்றாலே மக்களுக்கு ஒருவித ஐயம் இருப்பதை அவர் சுட்டினார்.

“சாதாரண வேலைகளைச் செய்து ஒட்டுமொத்தப் பணிச்சுமையை வலுப்படுத்தவே செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுமே தவிர அது நம்மைக் கையகப்படுத்த முடியாது என்று நம்புகிறேன்,” என்று அவர் குறிப்பிடார்.

நாட்டைக் கட்டியெழுப்புவது என்பது ஒருபோதும் ஒரு தலைமுறையினரின் பணியாக இருந்ததில்லை.

மாறாக, சிங்கப்பூரர்கள் அனைவரின் ஒன்றிணைந்த முயற்சியே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது என்று தமது வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் பிரதமர் வோங் கூறியதை எடுத்துரைத்தார் டாக்டர் ஹமீது.

குறிப்புச் சொற்கள்