தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடும் வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க புதிய திட்டங்கள் அறிமுகம்

2 mins read
0d09f145-4e4b-4232-b80c-5cb4d5077480
சிங்கப்பூரில் தொடர்ச்சியாக மூன்று நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை குறைந்தது 35 டிகிரி செல்சியாகப் பதிவாகி, ஒவ்வொரு நாளும் சராசரி வெப்பநிலை குறைந்தது 29 டிகிரி செல்சியசாக இருந்தால் அது வெப்ப அலையாகக் கருதப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் வெப்பம் கடுமையாக உள்ள நாள்களில் பொதுமக்கள் ஒதுங்குவதற்காக வெப்பத் தணிப்பு இடங்கள் திறந்துவிடப்படும்.

அதிகரித்து வரும் வெப்பநிலையைச் சமாளிக்க நடைமுறைப்படுத்தப்படும் தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைகிறது.

இந்த வெப்பத் தணிப்பு இடங்கள் தீவெங்கும் உள்ள பல இடங்களில் திறந்துவிடப்படும்.

அவற்றில் சில இடங்கள் குளிர்சாதன வசதிகளுடன் குளிரூட்டப்பட்டிருக்கும்.

வெப்பத் தணிப்பு இடங்கள் சமூக நிலையங்கள், குடியிருப்பாளர் குழுக்கள் நிலையங்கள், குளிர்சாதன வசதியுடனான உள்ளரங்கு விளையாட்டு மண்டபங்கள் ஆகியவற்றில் அமைக்கப்படக்கூடும்.

வெப்பத் தணிப்பு இடங்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

30க்கும் மேற்பட்ட அரசாங்க அமைப்புகள், அமைச்சுகள் ஆகியவை அடங்கிய புதிய குழு முன்வைத்துள்ள நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த வெப்பத் தணிப்பு இடங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இக்குழுவுக்கு மெர்க்குரி பணிக்குழு என்று பெயரிடப்பட்டுள்ளது.

பணிக்குழு முன்வைத்துள்ள திட்டங்கள் புதன்கிழமை (மார்ச் 19) வெளியிடப்பட்டது.

பணிக்குழுவில் அங்கம் வகிக்கும் அமைப்புகளில் சுகாதார அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் இடம்பெறுகின்றன.

கட்டுமான ஊழியர்கள் போன்ற எளிதில் பாதிப்படையக்கூடியவர்களை கடும் வெப்பத்தால் ஏற்படும் நோய்களிடமிருந்து பாதுகாக்க ஏற்கெனவே சில திட்டங்கள் நடப்பில் உள்ளன.

உதாரணத்துக்கு, வெப்பம் கடுமையாக இருக்கும் நாள்களில் வெளிப்புறங்களில் கடுமையாக உழைக்கும் கட்டுமான ஊழியர்களுக்கு ஒவ்வொரு மணி நேரமும் குறைந்தது பத்து நிமிடங்கள் நிழலில் ஓய்வெடுக்க நேரத்தைக் கட்டாயம் ஒதுக்க வேண்டும்.

இந்நிலையில், வெப்ப அலைகள் முன்னுரைக்கப்படும்போது பல்வேறு துறைகள் எவ்வாறு செயல்பட வேண்டும், எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிவிக்க தேசிய அடிப்படையிலான அணுகுமுறையைப் புதிய திட்டம் அமைத்துத் தருகிறது.

சிங்கப்பூரில் தொடர்ச்சியாக மூன்று நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை குறைந்தது 35 டிகிரி செல்சியாகப் பதிவாகி, ஒவ்வொரு நாளும் சராசரி வெப்பநிலை குறைந்தது 29 டிகிரி செல்சியசாக இருந்தால் அது வெப்ப அலையாகக் கருதப்படுகிறது.

சிங்கப்பூரில் வெப்ப அலை ஏற்படும் சாத்தியம் அதிகமுள்ளது என்று சிங்கப்பூர் வானிலை மையம் முன்னுரைத்தால் கூட்டு ஆலோசனை அறிக்கை வெளியிடப்படும் என்று பணிக்குழு கூறிது.

வெயில் சுட்டெரிக்கும்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அந்தக் கூட்டு ஆலோசனை அறிக்கையில் பட்டியலிடப்படும்.

கடும் வெப்பம் தணியும் என்று முன்னுரைக்கப்படும் வரை கூட்டு ஆலோசனை அறிக்கையில் இடம்பெறுபவை நடப்பில் இருக்கும்.

கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

மூத்தோர், நோய்வாய்பட்டவர்கள், கர்ப்பிணிகள் போன்ற எளிதில் பாதிப்படையக்கூடியவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கடும் வெப்ப நாள்களில் பள்ளி மாணவர்கள் அதற்கு ஏற்புடைய சீருடைகளை அணிய வேண்டும்.

மேலும், வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

இதை அனைத்துப் பள்ளிகளும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பணிக்குழு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்