பொதுச் சேவை அதிகாரிகளுக்காக புதிய மின்னிலக்க அரசாங்கப் பயிற்சிக் கழகம்

பொதுச் சேவை அதிகாரிகளுக்காக புதிய மின்னிலக்க அரசாங்கப் பயிற்சிக் கழகம்

2 mins read
a8ac75e9-0cac-48a5-a189-ffb189688b70
தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணை அமைச்சர் ஜாஸ்மின் லாவ். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும் அரசாங்க சேவைப் பயிற்சிக் கழகமும் (சிஎஸ்சி) இணைந்து மின்னிலக்க அரசாங்கப் பயிற்சிக் கழகத்தை நிறுவவுள்ளன.

அந்தக் கழகம் 150,000க்கும் மேற்பட்ட பொதுச் சேவை அதிகாரிகள் மற்றும் தலைவர்களை மின்னிலக்க, தரவு, வடிவமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறன்களுடன் ஆயத்தப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.

நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (மார்ச் 2) நடந்த தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணை அமைச்சர் ஜாஸ்மின் லாவ் பேசினார்.

புதிய கழகத்தின் ஒரு பகுதியாக இணையப் பாதுகாப்பு, தரவுப் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்க அறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டாய அடிப்படைப் பாடங்களை பொதுச் சேவை அதிகாரிகள் அனைவரும் மேற்கொள்வர்.

“கடினமாக உழைக்கும் பொதுச் சேவை அதிகாரிகள் பலரும் தங்கள் பணிசார்ந்த திறன்களை வளர்த்துக்கொள்ள பல ஆண்டுகளைச் செலவிட்டுள்ளனர்,” என்று சொன்னார் அமைச்சர் லாவ்.

அதுமட்டுமின்றி, தற்போது அமைச்சர்கள் மற்றும் பொதுச் சேவை மூத்த தலைவர்களுக்கான மின்னிலக்கப் பயிற்சி தொடங்கிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

காலாவதியான கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்

செயல்படாத, காலாவதியான கட்டமைப்புகளைத் தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு மேம்படுத்தும்.

தேசிய சுகாதாரப் பராமரிப்புக் கோரிக்கைத் தளம் (National Platform for Healthcare Claims) போன்ற முக்கியமான சுகாதார அமைப்புகள் புதுப்பிக்கப்படும்.

மேலும், சுகாதாரப் பணியாளர்களுக்கான வழக்கமான சோதனைகளை நெறிப்படுத்தவும் தானியக்கமயமாக்கவும் தொழில்முறைப் பதிவுமுறை மீண்டும் கட்டமைக்கப்படுகிறது.

புதிய தாதியர்களைப் பதிவுசெய்வதற்கான நீண்ட செயல்முறைகள் ஒரு தடையாக மாறி பராமரிப்பை தாமதப்படுத்தும் என்று அமைச்சர் லாவ் விளக்கினார்.

“பழைய அமைப்புகளைப் புதுப்பிப்பதால் அரசாங்கத்துடனான பொதுமக்களின் அனுபவம் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும்,” என்றார் அமைச்சர் லாவ்.

எடுத்துக்காட்டாக, ‘லைஃப்எஸ்ஜி’ செயலி மூலம், குழந்தைப் பிறப்பு பதிவு, குழந்தை போனஸ், பகிரப்பட்ட பெற்றோர் விடுப்பு போன்ற சேவைகளை மிகவும் குறைந்த நேரத்தில் முடிக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரை மின்னிலக்கமயமாக்க தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்ட கட்டமைப்புகள், அப்போது பரவலாக இருந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை.

இன்று, அவை நீக்குப்போக்கானதாகவும், செலவுமிக்கதாகவும், ஒருங்கிணைக்க கடினமானவையாகவும் உள்ளன என்று அமைச்சர் லாவ் குறிப்பிட்டார்.

“சேவைகள் தரமாகவும் விரைந்தும் கிடைக்க வேண்டும். ஏனென்றால் தாமதங்கள் நிர்வாக அடிப்படையில் மட்டுமல்லாது நடைமுறை வாழ்க்கையையும் பாதிக்கின்றன. இது சுகாதாரப் பராமரிப்பில் முக்கியமானது,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்