முஸ்லிம் சமூக முன்னேற்றம் தொடர புதிய தற்காலிக அமைச்சர் ஸாக்கி உறுதி

முஸ்லிம் சமூக முன்னேற்றம் தொடர புதிய தற்காலிக அமைச்சர் ஸாக்கி உறுதி

3 mins read
54876b7d-97db-4a62-aeff-30a9072e049d
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சராகப் பதவியேற்றபின் திரு ஸாக்கி முகம்மது செய்தியாளர்களைத் திங்கட்கிழமை (ஜூலை 20) சந்தித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முஸ்லிம் சமூகத்திற்கான சேவையில் கடப்பாட்டுடன் செயல்பட வலுவான ஒரு குழு எப்போதும் காத்திருக்கும் என்றும் முஸ்லிம் சமூக முன்னேற்றத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என்றும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்புவகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது உறுதியளித்துள்ளார்.

முஸ்லிம் சமூகத்துடன் அணுக்கமாகப் பணியாற்றிய இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் திங்கட்கிழமை (ஜூலை 20) பதவி விலகியதைத் தொடர்ந்து, தற்காப்பு, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகம்மது முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்புவகிக்கும் தற்காலிக அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

தற்காலிக அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் திரு ஸாக்கி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

மெண்டாக்கி சுய உதவிக் குழுவின் தலைவருமான அவர், மெண்டாக்கி 2030, ‘துனாஸ்‘ திட்டங்கள் மூலம் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை உருவாக்க, டாக்டர் ஃபைஷாலுடன் 20 ஆண்டுகள் இணைந்து பணியாற்றியதை நினைவுகூர்ந்தார்.

“நடந்த சம்பவத்திற்கு வருந்துகிறேன். எனினும், முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை அறிந்து உதவ, தொடர்ந்து ஈடுபாட்டுடன் செயல்பட உறுதியளிக்கிறேன். சமூகப் பங்காளிகளுடனும் தொண்டூழியர்களுடனும் இணைந்து, அனைவரும் சிறக்கவும் ஒற்றுமைமிகு சமூகமாக ஒன்றிணையவும் தொடர்ந்து பாடுபடுவேன்,” என்றார் திரு ஸாக்கி.

சமூக விவகாரங்களை எவ்விதத் தொய்வுமின்றி முன்னெடுத்துச் செல்லப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சிக்கு இன்னும் பல முக்கியப் பணிகள் உள்ளதால், அனைத்துப் பங்காளிகளுடனும் இணைந்து தற்காலிக அமைச்சராகத் தமது முழுப் பங்களிப்பை வழங்கப் போவதாகவும் திரு ஸாக்கி உறுதிகூறினார்.

ஃபைஷாலின் சேவையைப் பாராட்டிய அமைச்சர் மசகோஸ்

இவ்வேளையில், குடும்பங்களை வலுப்படுத்தவும் சிறையிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் குற்றம் புரிவதைத் தடுப்பதற்கும் இளையர்களை ஊக்குவிக்கவும் இணைப் பேராசிரியர் ஃபைஷால் கடப்பாட்டுடன் செயல்பட்டார் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி பாராட்டினார்.

முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராக முன்பு பதவி வகித்த திரு மசகோஸ், சமூகத்தை ஒன்றிணைக்க டாக்டர் ஃபைஷால் ஆற்றிய பங்களிப்புகளையும் சுட்டினார் .

இணைப் பேராசிரியர் ஃபைஷாலுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவர் சேவையாற்றிய சமூகத்துக்கும் இது கடினமான காலகட்டம் என்றும் அமைச்சர் மசகோஸ் குறிப்பிட்டார்.

சமூகத்தை முன்னேற்றப் பாதையில் வைத்திருப்பதற்கான முயற்சிகள் தொடரவேண்டும் என்று வலியுறுத்திய அவர், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திரு ஸாக்கிக்கு அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பதவி விலகியது கண்ணியமான செயல்: வான் ரிசால்

டாக்டர் ஃபைஷால் தமது செயலுக்கு முழுப் பொறுப்பேற்றுக்கொண்டதைக் குறிப்பிட்டுத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வான் ரிசால், இந்தச் சூழலில் அவர் பதவி விலகியது கண்ணியமான செயல் என்று குறிப்பிட்டார்.

இணைப் பேராசிரியர் ஃபைஷாலின் பதவி விலகல் செய்தி அதிர்ச்சியளிக்கும் ஒன்றாக இருந்தது என்றும் இந்த இக்கட்டான நேரத்தில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் டாக்டர் வான் ரிசால் கேட்டுக்கொண்டுள்ளார்.

“கடந்த இருபது ஆண்டுகளாக மக்களுக்குச் சேவையாற்றி வந்த டாக்டர் ஃபைஷால், தற்காலிக அமைச்சராக முஸ்லிம் சமூகத்திற்கு ஆற்றிய பங்கு அளப்பரியது,” என்றார் அவர்.

சமூகத்தை வலுப்படுத்த இணைப் பேராசிரியர் ஃபைஷால் ஆற்றிய பங்களிப்புகள் தொடரும் என்று கூறியதுடன் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்புவகிக்கும் தற்காலிக அமைச்சராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திரு ஸாக்கி முகம்மதுக்குத் தமது ஆதரவையும் டாக்டர் வான் ரிசால் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
ஃபைஷால் இப்ராஹிம்முஸ்லிம்முயிஸ்அமைச்சர்