குறைந்த சந்தாவில் ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்கள்

குறைந்த சந்தாவில் ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்கள்

2 mins read
8f751051-0617-4a1b-802b-ea52833e8f94
பலருக்கு, ஒவ்வொரு ஆண்டும் சேமிக்கப்படும் காப்பீட்டுத் தொகையானது, அவர்கள் எப்போதாவது மருத்துவமனைக்குச் செல்லும்போது ஏற்படும் கூடுதல் செலவை ஈடுகட்டப் போதுமானதாக இருக்கும்,’’ என்று அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளர். - படம்:சாவ் பாவ்

சராசரியாக 35 முதல் 40 விழுக்காடுவரை குறைவான சந்தாக்களைக் கொண்ட புதிய ஒருங்கிணைந்த ஷீல்ட் காப்புறுதித் திட்டங்கள், தனியார் சுகாதாரச் சேவையை நிலைத்தன்மை வாய்ந்ததாகவும் கட்டுப்படியானதாகவும் மாற்ற கைகொடுக்கும் என்று சுகாதாரம் மூப்படைதல் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளர்.

கூடுதல் கட்டணங்கள், அதிகப்படியான பயன்பாடு, அதிகரித்து வரும் செலவுகள் உள்ளிட்ட போக்குகளை மாற்றி, தனியார் சுகாதாரச் சேவைகள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கச் செய்யும் வகையில், இந்த குறைவான சந்தா தொகைகள் உதவும் என்று சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஓங் கூறினார்.

புதன்கிழமை (ஏப்ரல் 1) அன்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் “பலருக்கு, ஒவ்வொரு ஆண்டும் சேமிக்கப்படும் காப்பீட்டுத் தொகையானது, அவர்கள் எப்போதாவது மருத்துவமனைக்குச் செல்லும்போது ஏற்படும் கூடுதல் செலவை ஈடுகட்டப் போதுமானதாக இருக்கும்,’’ என்று திரு ஓங் சொன்னார்.

கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் ஏற்படும் பெரும் மருத்துவச் செலவுகளிலிருந்து புதிய ஐபி ரைடர்கள் மக்களைத் தொடர்ந்து பாதுகாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள ஏழு காப்புறுதி நிறுவனங்களும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து புதிய ஒருங்கிணைந்த ‌ஷீல்ட் ரைடர் திட்டத்தை (ஐபி) நிறுவின.

ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டத்தின்கீழ் சந்தாதாரர்கள் குறிப்பிட்ட குறைந்தபட்ச கட்டணத்தைச் செலுத்திய பிறகே காப்புறுதித் திட்டத்திலிருந்து கட்டணங்கள் கழிக்கப்படும். அந்த நிபந்தனையைச் சுகாதார அமைச்சு மாற்றுகிறது என்ற அறிவிப்பு அண்மையில் வெளியாகியிருந்தது.

அத்துடன் இணைக் கட்டண வரம்பையும் $6,000க்கு அமைச்சு உயர்த்தியது. இத்தகைய நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய காப்புறுதி நிறுவனங்கள் புதிய ஐபி திட்டத்தை அறிமுகம் செய்கின்றன.

தற்போதுள்ள ரைடர் திட்டம் நிபந்தனையை மீறுவதால் பெரும்பாலான காப்புறுதி நிறுவனங்கள் அவற்றைக் கைவிடுவதாக முன்னர் தெரிவித்தன என்பதும் இவ்வேளையில் கவனிக்கத்தக்கது.

ஊடகங்கள் இதன்தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சுகாதார அமைச்சு புதிய காப்புறுதிகளை வரவேற்பதாகக் கூறியது.

மேலும், இந்தக் காப்புறுதிகளின் சந்தா  பழைய திட்டங்களை விட 35 முதல் 40 விழுக்காடுவரை குறைவாக இருப்பதாகவும், பழைய ரைடர் திட்டம்  ஏப்ரல் 1 முதல் விற்பனை செய்யப்படாது என்றும் அமைச்சு கூறியுள்ளது.

சுகாதார அமைச்சின் கருத்தின்படி, காப்பீட்டுக் கட்டணங்கள் 68 விழுக்காடுவரை குறையக்கூடும்.

குறிப்புச் சொற்கள்