சிங்கப்பூரில் புதிய ஐஃபோன் 17 புரோ மேக்ஸ் கைப்பேசியை முதலில் வாங்கியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் 47 வயது ஜோனதன் இங்.
அதிகாலை 6.45 மணிக்குத்தான் வரிசையில் நின்றபோதிலும் அவருக்கு இது சாத்தியமானது.
கிட்டத்தட்ட 250 பேர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) அதிகாலை நேரத்திலிருந்து அல்லது முந்திய நாள் இரவிலிருந்து ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு வெளியே வரிசையில் காத்திருந்தனர்.
மனிதவள நிபுணரான திரு இங், இரண்டு கைப்பேசிக்களுக்காக ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தார்.
இதனால், காலை 8 மணிக்கு கடை திறந்ததும் அவருக்குக் கைப்பேசிகள் கிடைத்தன.
கைப்பேசிகளுக்கு முன்கூட்டியே முன்பதிவு செய்திருந்தபோதிலும் ஏன் வரிசையில் நின்றீர்கள் என்று கேட்கப்பட்டபோது, அதிகாலையில் விழித்தெழும் பழக்கத்தைத் தான் கொண்டிருப்பதாகத் திரு இங் கூறினார்.
முன்னதாக, காலை 8 மணி நெருங்கியதும், ஆப்பிள் ஸ்டோருக்கு வெளியே காத்திருந்த ஐஃபோன் ரசிகர்கள் உற்சாகமடைந்து, நொடிகளை எண்ணத் தொடங்கினர்.
காலை 8 மணிக்கு கதவுகள் திறக்கப்பட்டதும், வாடிக்கையாளர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். மடை திறந்த வெள்ளம்போல கடைகளுக்குள் அவர்கள் புகுந்து, புதிய வகை ஐஃபோனை வாங்குவதற்குத் தயாராக இருந்தனர். முன்கூட்டியே ஆர்டர் செய்தவர்களுக்கும் நேரில் வந்து வாங்குபவர்களுக்கும் தனித்தனி வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன.
தொடர்புடைய செய்திகள்
நான்கு புதிய கைப்பேசி வடிவங்கள், புதிய ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்பாட்ஸ் புரோ ஆகியவை ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பொருள்களாக இருந்தன.
கைப்பேசிகள் விற்பனைக்கு வந்த ஒரு மணி நேரத்திற்குள் மறுவிற்பனையாளர்கள் கேரொசல் போன்ற இணையத்தளங்களில் விற்பனை செய்யத் தொடங்கினர். காலை 10.45 மணிக்குள், புதிய ஐஃபோன்களின் 43 விற்பனைப் பட்டியல்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் பெருஞ்சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில் புதிய வடிவத்துடனான ஐஃபோன்கள் சந்தைக்கு வந்துள்ளன. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பின் வர்த்தகக் கொள்கைகளும் வரிவிதிப்பு உத்திகளும் உற்பத்திச் செலவுகளை அதிகரித்துள்ளன.
2024ல் அறிமுகப்படுத்தப்பட்ட வடிவங்களுடன் ஒப்பிடுகையில், ஐஃபோன் விலைகள் சீராக இருந்தபோதிலும், கடந்த காலாண்டில் டிரம்ப்பின் வரிகள் நிறுவனத்திற்கு 800 மில்லியன் அமெரிக்க டாலர் (1.02 பில்லியன் வெள்ளி) செலவை ஏற்படுத்தியுள்ளதாக ஆப்பிள் நிறுவனத் தலைமை நிர்வாகி டிம் குக் ஜூலை மாதம் தெரிவித்தார்.