தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய இஸ்லாமிய கல்லூரி சமயத் தலைவர்கள், சமூகப் பங்களிப்பாளர்களை உருவாக்கும்: பிரதமர் வோங்

2 mins read
e2451b5c-72b9-4039-baf6-2131d2898e08
எம்3 கூட்டமைப்பின் ஆண்டுவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற கண்காட்சியைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பார்வையிட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரில் அமைய இருக்கும் இஸ்லாமிய ஆய்வுக் கல்லூரி சமயத் தலைவர்களை உருவாக்குவதோடு சமூகத் துறைக்குப் பங்களிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற ஒன்றாகவும் இருக்கும் என பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

நான்காண்டு முழுநேர இஸ்லாமியக் கல்வி அல்லது சமூக அறிவியல் பட்டப்படிப்புக்கான வகுப்புகளை இஸ்லாமிய ஆய்வுக் கல்லூரி வழங்கும்.

‘சிங்கப்பூர் இஸ்லாமிய ஆய்வுக் கல்லூரி (SCIS)‘ என்னும் பெயரில் அமைய இருக்கும் அந்தக் கல்லூரி உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பாடத்திட்டங்களை வழங்கும்.

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம், எகிப்தின் இஸ்லாமிய ஆலோசனை மன்றமான ‘டார் அல் இஃப்தா’, ஜோர்டான் பல்கலைக்கழகம், மொரோக்கோவின் அல் கராவியின் ஆகிய பல்கலைக்கழகங்கள் அவை.

அந்தப் பல்கலைக்கழகங்களின் தலைவர்களும் எகிப்தின் அல் அஸார் போன்ற இதர பல்கலைக்கழகங்களின் தலைவர்களும் இஸ்லாமிய ஆய்வுக் கல்லூரியின் ஆலோசனை மன்றத்தில் இடம்பெறுவர்.

முஸ்லிம் சிறுபான்மை மக்களின் தற்காலப் பிரச்சினைகள் மீதான தங்களது கண்ணோட்டத்தை அவர்கள் வெளிப்படுத்துவர்.

மூன்று முக்கிய மலாய்/முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்த எம்3 (M3) கூட்டமைப்பின் ஐந்தாண்டு ஆண்டு விழா தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசுகையில் பிரதமர் வோங் இந்த விவரங்களை வெளியிட்டார்.

முயிஸ் (MUIS) எனப்படும் இஸ்லாமிய சமய மன்றம், மெண்டாக்கி (MENDAKI) மற்றும் மெஸ்ரா (MESRA) ஆகிய அமைப்புகள் அவை.

“இந்த மூன்றும் தனித்தனியே சிறப்பாகச் செயல்பட்டபோதிலும் மூன்று அமைப்புகளையும் ‘எம்3’ ஒருங்கிணைத்துள்ளது. அதன் மூலம் அவற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. அந்தத் தாக்கம் ஒன்றாக இணைந்தது மட்டுமின்றி மேலும் வேகமானதும்கூட. எம்3 என்று சுருக்கமாகப் பெயர் வைத்திருப்பது அதனைப் பிரதிபலிக்கிறது. 

“குறிப்பாக, மெஸ்ரா அமைப்பு சமூகப் பங்கேற்புக்கான தளத்தை உருவாக்கி உள்ளது. மலாய்/முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமின்றி நமது பரந்து விரிந்த சமூகத்துக்கும் அது சேவையாற்றுகிறது,” என்றார் பிரதமர்.

இஸ்லாமிய ஆய்வுக் கல்லூரி பற்றி முதன்முதலில் கடந்த 2016ஆம் ஆண்டு செய்தி வெளியானது. இங்குள்ள சமய போதகர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அந்தக் கல்லூரி பற்றிய யோசனை தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரின் பல இன, பல சமய சமுதாயத்தில் உறுதியான, பொருத்தமான வழிகாட்டுதல்களை முஸ்லிம்களுக்கு வழங்க அந்தப் பயிற்சி பற்றி வலியுறுத்தப்பட்டது.

இவ்வாண்டு தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் வோங், இஸ்லாமிய ஆய்வுக் கல்லூரியின் பெயரை அறிவித்தார். இருப்பினும், அது எப்போது செயல்படத் தொடங்கும் என்பது பற்றிய தகவல் இல்லை.

வருங்கால சமய போதகர்களுக்கான வழிமுறைகளை வளர்க்கவும் பேணவும் சிங்கப்பூருக்குத் தேவைப்படும் திறன்களை புதிய இஸ்லாமிய ஆய்வுக் கல்லூரி வலுப்படுத்தும் என்று ஞாயிற்றுக்கிழமை அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்