செயற்கை நுண்ணறிவில் புதிய வேலை வாய்ப்பு

செயற்கை நுண்ணறிவில் புதிய வேலை வாய்ப்பு

3 mins read
0347a76f-9b07-4b0f-afa7-72303f063a53
‘ஃபார்வர்ட் டிப்ளாய்ட்’ பொறியாளர் பணியில் சேரும்போது கிட்டத்தட்ட ஒரு மாணவரைப் போல அனைத்தையும் புதிதாகக் கற்றுக்கொள்ளத் தொடங்குவீர்கள் என்று ஒப்பன்ஏஐ நிறுவனத்தில் பணியாற்றும் ஷரண் தங்கவேலு கூறுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாட்டைத் தீவிரப்படுத்தும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் ஒரு புதிய வேலை வாய்ப்புக்கான தேவை பெருமளவில் அதிகரித்துள்ளது.

‘ஃபார்வர்ட் டிப்ளாய்ட்’ பொறியாளர்கள் (Forward Deployed Engineers) எனப்படும் புதிய தலைமுறை தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தேவையை இந்த ஏஐ புரட்சி செய்துள்ளது.

மென்பொருள் உருவாக்கும் திறனோடு, வாடிக்கையாளர்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்வுகண்டு, அதை அவர்களுக்குப் புரியும் வகையில் எளிமையாக விளக்கும் பன்முகத் திறமை கொண்டவர்களே இந்தச் சிறப்புப் பொறியாளர்கள்.

‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் நடத்திய ஆய்வில், ‘மைகேரியர்ஃபியூச்சர்’, ‘லிங்கெடின்’, ‘இன்டீட்’ போன்ற முக்கிய வேலைவாய்ப்பு இணையத்தளங்களிலும் பெரிய நிறுவனங்களின் பக்கங்களிலும் இந்த புதிய பணிக்காகச் சிங்கப்பூரில் குறைந்தது 35 காலியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

கூகல், பைட்டான்ஸ் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள், சிங்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் மிஸ்ட்ரல் ஏஐ, காக்னிஷன் போன்ற வளர்ந்து வரும் ஏஐ தொழில்முனைப்பு நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளன.

பிரபலமான 'சாட்ஜிபிடி'யை உருவாக்கிய அமெரிக்காவின் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம், அடுத்த சில ஆண்டுகளில் சிங்கப்பூரில் 200 ஃபார்வர்ட் டிப்ளாய்ட் பொறியாளர்களை வேலைக்கு அமர்த்த அல்லது அவர்களுக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையோடு தற்போதைய காலியிடங்களும் சேர்ந்துள்ளன.

அதேபோல், சிங்கப்பூரில் ஏற்கெனவே ஏறக்குறைய 30 ஃபார்வர்ட் டிப்ளாய்ட் பொறியாளர்களைக் கொண்டுள்ள அமெரிக்காவின் 'டேட்டாபிரிக்ஸ்' மேகக்கணினி (Cloud) நிறுவனமும் நடப்பு ஆண்டில் மேலும் 30க்கும் மேற்பட்ட பணியிடங்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தைச் சோதித்துப் பார்க்கும் கட்டத்தைத் தாண்டி, அதைத் தங்களின் அன்றாட உண்மையான உலகச் செயல்பாடுகளில் நேரடியாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்பணிக்கான தேவை பல மடங்கு உயர்ந்துள்ளது.

தொழில்நுட்ப ஏஐ அறிவோடு, மிகச்சிறந்த தகவல் தொடர்புத் திறனும் கொண்டவர்களைக் கண்டறிவது சவாலாக இருப்பதால் இந்தத் துறையில் உள்ளவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது.

இது குறித்து பேசிய 'ராண்ட்ஸ்டாட் சிங்கப்பூர்' நிறுவனத்தின் இயக்குநரான டேவிட் பிளாஸ்கோ, கடந்த 2024ஆம் ஆண்டில் உள்ளூர் வேலைவாய்ப்புத் தளங்களில் இத்தகைய பொறியாளர்களுக்கான 80 விளம்பரங்கள் மட்டுமே இருந்த நிலையில் 2025ல் அது 400க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு விளம்பரங்களாக அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது என்றார்.

நடுத்தர அனுபவமுள்ள ஒரு ‘ஃபார்வர்ட் டிப்ளாய்ட்’ பொறியாளரின் ஆண்டு வருமானம் குறைந்தது 120,000 வெள்ளியாக இருக்கும் என்றும் பிளாஸ்கோ குறிப்பிட்டார்.

இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரு வழக்கமான பிஸ்னஸ் அனாலிஸ்ட்டின் ஆரம்ப ஆண்டுச் சம்பளம் 80,000 வெள்ளியாகவும், ஒரு வழக்கமான மென்பொருள் பொறியாளரின் சம்பளம் குறைந்தது 90,000 வெள்ளியாகவும் மட்டுமே இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மறுபுறம், சிங்டெல் நிறுவனம் இப்பணிக்கு மாதச் சம்பளமாகக் குறைந்தது 5,000 வெள்ளி வழங்குவதாக ஜூன் 9 அன்று மைகேரியர்ஃபியூச்சர் தளத்தில் வெளியிட்ட விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த ஃபார்வர்ட் டிப்ளாய்ட் பொறியாளர்கள் வழக்கமாக வங்கிகள், மருத்துவமனைகள், துறைமுகங்கள் அல்லது தொழிற்சாலைகளுக்கே நேரடியாகச் சென்று, வாடிக்கையாளர்களோடு இணைந்து பிரத்யேக ஏஐ தீர்வுகளை உருவாக்குவார்கள்.

தற்போது ஓப்பன்ஏஐ நிறுவனத்திலும், இதற்கு முன்பு அமெரிக்க ஏஐ நிறுவனமான பாலண்டீரிலும் (Palantir) இப்பதவியில் பணியாற்றிய 29 வயது ஷரண் தங்கவேல், "இப்பணியில் சேரும்போது நீங்கள் கிட்டத்தட்ட ஒரு மாணவரைப் போலத்தான் அனைத்தையும் புதிதாகக் கற்றுக்கொள்ளத் தொடங்குகிறீர்கள்," என்றார்.

மேலும், இந்தத் துறையில் நுழைய விரும்புபவர்கள் பாடப்புத்தக அறிவோடு நின்றுவிடாமல், களத்தில் செயல்படுவதற்கான நடைமுறைச் சாதுரியத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

கூகல் மேகக்கணினி தீர்வு மற்றும் தொழில்நுட்பத்திற்கான வட்டார நிர்வாக இயக்குநரான மிதேஷ் அகர்வால், "இவர்களின் நிபுணத்துவம், வரும் காலங்களில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பரந்த தொழில்நுட்பக் கட்டமைப்புகளை நிர்வகிப்பதிலும், இந்த அமைப்புகள் பாதுகாப்பாகவும் திறமையாகவும் சட்ட விதிமுறைகளுக்கு இணங்க செயல்படுவதை உறுதி செய்வதிலும் அதிக கவனம் செலுத்தும்," என்றார்.

குறிப்புச் சொற்கள்