முன் அனுபவத்தை மட்டும் நம்பியிருந்தால் வேலையிடத்தில் சிறக்க முடியாது.
இந்த உண்மையைச் சிங்கப்பூரின் 56 விழுக்காட்டு நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோர் உணர்வதாகத் தொழில் இணைப்புகளுக்கான ‘லிங்க்டுஇன்’ தளத்தின் அண்மைய ஆய்வு காட்டுகிறது.
சிங்கப்பூரிலிருந்து 2,000 பேரும் ஆசிய பசிஃபிக் வட்டாரத்திலிருந்து 6,000 பேரும் இந்த ஆய்வில் பங்கெடுத்தனர்.
தற்கால வேலையிடத்தின் தேவைகளையும் பணியாளர்கள் வருங்காலத்தை எவ்வாறு செயல்திறனுடன் கையாளலாம் என்பது குறித்த உதவிக் குறிப்புகளையும் இந்த ஆய்வு தொகுத்துள்ளது.
வேலையிடத்தில் ஏற்படும் அழுத்தம் காரணமாக சிங்கப்பூரில் 79 விழுக்காட்டு ஊழியர்கள் தங்களுக்குக் கூடுதல் வேலை ஆதரவு தேவைப்படுவதாகக் கூறுகின்றனர்.
இவர்களில் பலர், என்ன செய்வது என அறியாமல் திணறுவதாகக் கூறப்படுகிறது. தங்கள் வாழ்க்கைத்தொழிலின் அடுத்தகட்டத்திற்குத் தயாராக விரும்பும் நிபுணர்கள், எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை என்கின்றனர்.
மூன்று முக்கியச் சவால்கள்
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடும் செயல்படும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றமும் வேலையிடத்தின் இயல்புநிலையை மாற்றியுள்ளன.
அன்றாட வேலையில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பது (36 விழுக்காட்டினர்), திறன் மேம்பாட்டுக்கான தேவையை அறிந்து செயல்படுவது (31 விழுக்காட்டினர்), சவால்மிக்க பொருளியலுக்கு மத்தியில் நீக்குப்போக்கிற்காகவும் பயிற்சிக்காகவும் தங்கள் வேலையிட நிர்வாகத்தினருக்கு குரல்கொடுப்பது (27 விழுக்காட்டினர்) ஆகியவை முக்கியச் சவால்கள் என இந்த ஆய்வில் பங்கேற்றோர் கூறியுள்ளனர்.
தொழில்நுட்பர்கள் அல்லாத நிபுணர்கள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த பாடங்களை ‘லிங்க்டுஇன்’ தளத்தின் வாயிலாகப் பயில்வதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
தீர்வுகளும் பொறுப்புகளும்
வேலையிட மாற்றங்களை எதிர்கொள்வதற்குத் தங்களது நிர்வாகிகளை நம்பியிருக்க முடியும் என நிபுணர்களில் 39 விழுக்காட்டினரும் வேலையிட மாற்றங்களைச் சமாளிக்க நிர்வாகம் தங்களுக்கு உதவுவதாக 54 விழுக்காட்டினரும் கருதுகின்றனர்.
பணித்துறையில் நிகழும் மாற்றங்கள் பற்றி நன்கு தெரிந்துகொள்வது, தொடர்புத் திறன்களை மேம்படுத்துவது, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திப் பணியாற்றுவது ஆகியவை முக்கியமான தீர்வுகளாகக் கூறப்படுகின்றன.
செய்தி அறிக்கைகள், நிபுணர்களின் வழிகாட்டல்கள் போன்றவற்றை அடிக்கடி படித்து தொழில்துறையில் மாற்றங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது முதற்கட்ட முக்கியப் பணி என்கிறது அந்த ஆய்வு.
அத்துடன், மாறவேண்டிய கட்டாயத்தால் அழுத்தம் ஏற்படும்போது மனம் சஞ்சலம் அடையக்கூடும். அதனை எதிர்கொண்டு திறந்த மனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தளர வேண்டாம்
உலகம் அதிவேகமாக மாறிவந்தாலும் பின்தங்கிவிட்ட உணர்வைத் தவிர்க்கலாம் என்று வாழ்க்கைத் தொழில் வழிகாட்டியான யோலாண்டா யூ தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“செய்திகளைப் படிப்பதுடன் மக்களுடன் அதிகம் பழகுங்கள். வேலைச் சந்தையைப் பற்றிப் புரிந்துகொள்ள மற்ற வேலைகளுக்கு விண்ணப்பம் செய்து அதன் மூலம் மேலும் என்னென்ன திறன்கள் உங்களுக்குத் தேவைப்படலாம் எனத் தெரிந்துகொள்ளுங்கள்,” என்கிறார் திருவாட்டி யூ.
அனுபவங்களைச் சேகரிப்பதில் மட்டுமின்றி பண்புகளை வளர்ப்பதிலும் கவனம் செலுத்தும்படி அவர் கூறினார். “ஆர்வலர் குழுக்களில் சேருங்கள். தலைமைப் பொறுப்பு, பண்புகளை வளர்க்க அவை உதவும்,” என்றார் அவர்.
கற்றலையும் சுயபராமரிப்பையும் மேற்கொள்வது முக்கியம் என்று ‘வேர்ல்டு ஸ்கில்ஸ் சென்டர்’ திறன்மேம்பாட்டு நிறுவனத்தின் முதல்வர் டி தம்பிராஜா தெரிவித்தார்.
“சிறுகச் சிறுக, தொடர்ச்சியாகக் கற்றுக்கொண்டாலே அது முன்னேற்றத்தைத் தரும். கற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் தியானம், உடற்பயிற்சி போன்ற உத்திகளைப் பயன்படுத்தி மனத்தை நிதானப்படுத்தலாம்,” என்று அவர் கூறினார்.
இதனை ஒப்புக்கொள்ளும் ‘இன்செட்’ நிறுவனத்தின் வாழ்க்கைத் தொழில் வழிகாட்டி நித்தியா ராவ் பெரேரா, அலுவலக நிர்வாகத்தில் தலைவர்களாக இல்லாதவர்கள், நிறுவனத்தின் தொண்டூழிய வாய்ப்புகளைக் கண்டறிந்து அங்குத் தங்கள் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தலாம் என்று கூறினார்.
“நீங்கள் செய்யும் பங்களிப்புகளைச் சரியானவர்கள் கவனிக்கவேண்டும். அத்தகையோருடன் நட்புறவை வளர்த்து, உங்கள் இலக்குகளை அடையவேண்டும்,” என்றார் திருவாட்டி நித்தியா.