தொழில்நுட்பத் துறை பட்டதாரிகளுக்கு புதிய வேலை வாய்ப்புத் தளம்

தொழில்நுட்பத் துறை பட்டதாரிகளுக்கு புதிய வேலை வாய்ப்புத் தளம்

2 mins read
ad2c99c3-d7f7-4e96-9f9f-1bfd30739117
பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பத் துறைப் பட்டதாரிகளுக்கான புதிய வேலை வாய்ப்புத் தளத்தைத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் டான் கியெட் ஹாவ் அறிவித்தார். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் வேலை தேடும் தொழில்நுட்பத் துறைப் பட்டதாரிகளுக்கு ஆதரவளிக்க சிறப்பு வேலை வாய்ப்புத் தளம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவால் பல முதல் நிலை வேலைகள் பறிபோகும் நிலையில் புதிய தளத்தில் கிட்டத்தட்ட 800 தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் வேலை நியமன, வேலைத்தகுதி கழகமும் இணைந்து தொழில்நுட்ப மேம்பாடு, வேலைவாய்ப்பு நடுவம் (டெக்) என்ற தளத்தை அறிமுகம் செய்துள்ளன.

அந்தத் தளத்தில் என்சிஎஸ் சிங்கப்பூர், எஸ்டி எஞ்சினியரிங், ‌‌‌ஷாப்பி ஆகிய நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகள் உள்ளன.

இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு ஆகிய அறிமுக நிலை வேலைவாய்ப்புகள் டெக் தளத்தில் வழங்கப்பட்டுள்ளன.

தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் டான் கியெட் ஹாவ் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் டெக் தளம் குறித்து அறிவித்தார்.

“புதிய தளம் மூலம் நமது மாணவர்கள் ஊழியரணியில் இன்னும் சுலபமாகக் கால்பதிக்கலாம். பல்வேறு தளங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக ஒரே தளத்தில் தொழில்நுட்பத் துறை சார்ந்த அனைத்து வேலைவாய்ப்புகளையும் அவர்கள் பெறலாம்,” என்று திரு டான் கூறினார்.

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தகவல், மின்னிலக்கத் தொழில்நுட்ப மாணவர்களுக்கும் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கும் 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட டிஐபி அலையன்ஸ் (TIP Alliance) திட்டம் தற்போது பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் அறிமுகம் செய்த டிஐபி திட்டம், 1,000க்கும் அதிகமான தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகளையும் 2,300க்கும் அதிகமான பயிற்சி வாய்ப்புகளையும் தொழில்நுட்ப மாணவர்களுக்கும் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கும் வழங்கியுள்ளது.

இப்போது டிஐபி அலையன்ஸ் பிளஸ் (TIP Alliance+) என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது.

புதிய வேலை வாய்ப்புத் தளத்தைத் தவிர்த்து பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு நிதிச் சேவைகள், சுகாதாரத் தொழில்நுட்பம், பொதுச் சேவை ஆகிய துறைகளிலும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள் வழங்கும்.

குறிப்புச் சொற்கள்