சம்பளம் நிலுவையில் உள்ள 130க்கும் மேற்பட்ட ஊழியர்கள் புதிய நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்கள் இங்கேயே தொடர்ந்து பணியாற்ற விரும்பினால், அவர்களுக்கான இடமாற்றங்களுக்கு அதிகாரிகள் தொடர்ந்து வசதி செய்து கொடுப்பார்கள்.
தற்போது நடைபெற்று வரும் வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று நிறுவனங்களில் இரண்டான கேபிஏ என்ஜினியரிங் மற்றும் விவிஆர் பிளான்ட் என்ஜினியரிங், தீர்வை செலுத்தத் தவறியதன் காரணமாக மனிதவள அமைச்சால் அவற்றின் பணி அனுமதிச் சலுகைகள் குறைக்கப்பட்டன. அதன் காரணமாக, ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத் தொடக்கத்தில் இருந்து புதிய வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்த முடியவில்லை.
குறிப்பாகப் பல நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பெரிய அளவிலான சம்பவங்களில், ஊதியம் பெறாத ஊழியர்கள் குறித்து யிப் ஹான் வெங் (இயோ சூ காங்), சூ பெய் லிங் (சுவா சூ காங் குழுத்தொகுதி) ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, மனிதவள அமைச்சர் டான் சீ லெங் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) எழுத்துபூர்வமான நாடாளுமன்றப் பதிலில் இந்தத் தகவல்களை வழங்கினார்.
இதில் சம்பந்தப்பட்ட மூன்றாவது நிறுவனமான எஸ்.கே. இண்டஸ்ட்ரீசும் முன்னதாகத் தங்கள் தீர்வைகளைச் செலுத்தத் தவறியிருந்தது. ஆனால் செலுத்தவேண்டிய தீர்வைகள் செலுத்தப்பட்ட பிறகு அவர்களின் பணி அனுமதிச் சலுகைகள் மீண்டும் வழங்கப்பட்டன என்று டாக்டர் டான் கூறினார்.
மாற்றுத் தங்குமிடம் தேவைப்படும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் மாற்றுத் தங்குமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவர்கள் புதிய வேலை தேடும் வரை சிங்கப்பூரில் தங்குவதற்கு ஏதுவாக, அவர்களுக்குச் சிறப்பு அனுமதிச் சீட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.
மூன்று நிறுவனங்களுக்கு எதிராக மொத்தம் 407 சம்பளக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று திரு டான் கூறினார். இந்த நிறுவனங்கள் இந்தியரான ராமு பழனி வேலு என்ற ஒரே இயக்குநரைக் கொண்டிருந்தன. அவர் விசாரணையில் உதவி வருகிறார்.
ஒரு நிறுவனத்தை விசாரிக்கும்போது, அதன் இயக்குநர் பணி சார்ந்த கடமைகளை மீறியிருப்பது கண்டறியப்பட்டால், பொதுவாக அதே இயக்குநரின் கீழ் உள்ள மற்ற நிறுவனங்களையும் மனிதவள அமைச்சு விசாரிக்கும் என்று அமைச்சர் விவரித்தார்.

