ஆசியான் மின் உற்பத்தியால் புதிய வேலைகள், முதலீடுகள்: ஆய்வில் தகவல்

2 mins read
e2127b7d-1878-4b4c-aa0f-ea0a44ed7b53
ஆய்வின் முடிவுகள் சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வாரத்தின் மூன்றாம் நாளில் வெளியிடப்பட்டன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆசியான் நாடுகளின் மின் உற்பத்தி நிலையங்கள் இந்த வட்டாரத்தில் பசுமை மின்னாற்றலோடு மேலும் பல நன்மைகளையும் தரமுடியும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

புதிய வேலைகளை உருவாக்குவது, காற்று மாசுபாட்டைக் குறைப்பது ஆகிய நன்மைகளுடன் எரிசக்தித் துறையில் குறிப்பிடத்தக்க முதலீடுகளையும் அவற்றால் தருவிக்க இயலும் என்று அமெரிக்காவும் சிங்கப்பூரும் இணைந்து நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் ஆண்டுக்கு US$2 பில்லியன் (S$2.6 பில்லியன்) முதலீடுகளும் மின் உற்பத்தித்திறனின் ஒட்டுமொத்த உருவாக்கத்திற்கான US$1.4 டிரில்லியன் முதலீடுகளும் அதில் அடங்கும்.

இந்த வட்டாரத்தின் எரிசக்தித் தொடர்புத் திறன்களை ஆராய நடத்தப்பட்ட அந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வாரத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை (அக்டோபர் 23) வெளியிடப்பட்டன.

அமெரிக்க எரிசக்தித் துறையின் ஆதரவில் செயல்படும் ‘நெட்ஸீரோ வேர்ல்ட்’ திட்டத்தின் துணை இயக்குநரான டாக்டர் டேனியல் கஸ்பார் அவற்றை வெளியிட்டார்.

ஆசியான் நாடுகள் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருப்பதால் இந்த வட்டாரத்தில் சமூக-பொருளியல் நன்மைகள் கிடைக்கும் என்கிறது ஆய்வு.

அத்துடன், ஒரே இணைப்பில் மின் உற்பத்தி நிலையங்கள் இருக்கும்வரை ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.8 விழுக்காடு முதல் 4.6 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்றார் டாக்டர் கஸ்பார்.

2023 ஏப்ரல் மாதம் தொடங்கிய வட்டார மின்திறனைப் பற்றிய ஆய்வு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளம், ஆசியான் நாடுகளின் தற்போதைய மின் உற்பத்தி நிலைய உள்கட்டமைப்பு ஆகியவற்றோடு வட்டார ஒத்துழைப்பால் சமூக-பொருளியலில் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் ஆராய்ந்தது.

ஆசியான் மின் உற்பத்தி என்னும் நடைமுறை பல காலமாக நடப்பில் இருந்தாலும் 2022ஆம் ஆண்டு லாவோஸ்-தாய்லாந்து-மலேசியா-சிங்கப்பூர் மின் இறக்குமதி முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் அது முன்னேற்றம் பெறத் தொடங்கியது.

குறிப்புச் சொற்கள்