சிங்கப்பூரில் எதிர்காலத்தில் தானியக்க வாகனங்கள் வந்தாலும் ஓட்டுநர்களுக்குப் போக்குவரத்துத் துறையில் போதுமான வேலைகள் இருக்கும் என்று தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே சிங்கப்பூர் தானியக்க வாகனங்கள்மீது அதிகக் கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், தானியக்க வாகனங்கள் நடைமுறைக்கு வந்தால் தொழில்முறை ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமா என்று அமைச்சர் சியாவிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த திரு சியாவ், “சிங்கப்பூர் சாலைகளில் ஓட்டுநர்களால் இயக்கப்படும் வாகனங்களும் தானியக்க வாகனங்களும் இருக்கும்,” என்று தெரிவித்தார்.
இருப்பினும், வாகன ஓட்டுநர்கள் தொழில்ரீதியாகச் சில மாற்றத்தை எதிர்நோக்குவார்கள் என்றும் அவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதை அரசாங்கம் உறுதிசெய்யும் என்றும் அவர் கூறினார்.
சீனாவின் குவாங்ஸோ பகுதிக்கு இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் சியாவ் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
குவாங்ஸோ வட்டாரத்தில் எப்படி ஓட்டுநர் இல்லாமல் தானியக்க வாகனங்கள் செயல்படுகின்றன, அவற்றின் தொழில்நுட்பம் என்ன உள்ளிட்டவற்றை ஆராய்வதுதான் இப்பயணத்தின் நோக்கம் என்று அவர் விளக்கினார்.
“தானியக்க வாகனங்கள் செயல்பட்டாலும் அவற்றில் ஓர் அதிகாரி இருக்கக்கூடும். அவர் மூத்தோருக்கு உதவலாம்; பைகளை எடுத்துவைக்க, சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடும்,” என்று திரு சியாவ் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
தானியக்க வாகனங்கள் வந்தாலும் அதன் பின்னணியில் பல செயல்பாடுகள் உள்ளன என்றும் அதன்மூலம் பல வேலைகள் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குவாங்ஸோவில் உள்ள பேருந்து நிறுவனங்களில் உள்ள செயல்பாட்டுப் பிரிவில் இளையர்கள் பலர் வேலைசெய்து வருவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் சியாவ், இத்துறையில் நல்ல வேலைவாய்ப்பு இருப்பதை அது உணர்த்துவதாகவும் குறிப்பிட்டார்.

